|
ஒரு காலும் கையும் ஊனமுற்றவன் ஒருவன் இருந்தான். மிகுந்த இறைபக்தி கொண்டவன். ஐப்பசி மாதத்தில் அனைத்து புனித நதிகளும் காவேரியில் சங்கமிக்கின்றன என்றும்; அதில் நீராடினால் எல்லா பாவங்களும் விலகிவிடும் என்றும் கேள்வியுற்றான். செய்த பாவத்துக்கு இப்பிறவியில்தான் ஊனமுற்று வருந்துகிறோம். அடுத்த பிறவியிலாவது நல்லமுறையில் பிறக்கவேண்டும் என்று எண்ணிய அவன், மயிலாடுதுறை நோக்கி தத்தித் தத்திச் செல்லலானான். எல்லாரையும் போல நடக்கமுடியாத காரணத்தால், அவன் மயிலாடுதுறை காவேரிக் கட்டத்தை அடைந்தபோது ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் பிறந்துவிட்டது. அவன் மிகவும் மனம் வெதும்பி இறைவனை நினைத்துக் கண்ணீர்விட்டான். அப்போது சிவபெருமான் அசரீரியாக, கவலை வேண்டாம். நதியில் நீராடு. ஐப்பசியில் நீராடிய பயனைப் பெறுவாய் என்றார். அதைக்கேட்டு சிலிர்த்த அவன் இறைவனைத் துதித்தபடி காவேரியில் மூழ்கினான். எழுந்தபோது அவன் ஊனம் நீங்கி முழு மனிதனாகப் பொலிவுடன் திகழ்ந்தான். இறையருளை எண்ணி அவன் மனமுருக சிவபெருமான் அவனுக்குக் காட்சிதந்து, அவன் கேட்டுக்கொண்டபடி கார்த்திகை முதல் நாளில் நீராடினாலும் ஐப்பசியில் நீராடிய பயனை அனைவரும் பெறலாம் என்று அருளினார். அதுவே முடவன் முழுக்கு எனப்படுகிறது. |
|
|
|