|
எல்லா உலகத்திலும், எல்லாக் காலத்திலும் சஞ்சரிக்கும் ஆற்றல் பெற்றவரான நாரதர், ஒரு சமயம் பூலோகத்திற்கு வந்திருந்தார். ஒவ்வொரு இடமாக சுற்றிப் பார்த்துக்கொண்டே வந்தவர், கால் பந்தாட்ட மைதானம் ஒன்றில் பலர் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். இரண்டு பக்கத்திலும் இருந்தவர்களுக்கு இடையே ஒரு பந்து மாறி மாறி உதைபட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த அவருக்கு வேடிக்கையாக இருந்தது. கால் பந்துக்குள் அடைப்பட்டிருந்த கால் அதாவது காற்று இங்கும் அங்கும் அடிபட்டுக் கதறுவதாகத் தோன்றியது நாரதருக்கு. கொஞ்ச நேரம் விளையாட்டை ரசித்துவிட்டு வேறு இடத்துக்குப் போனார். அங்கே புல்லாங்குழல் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. மேடையில் இருந்த இசைக்கலைஞர் ஆழ்ந்து வாசிக்க, குழலில் இருந்து வெளிப்பட்ட இசையை பெரும் கூட்டம் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தது.
இப்போது நாரதருக்கு ஒரு சந்தேகம் வந்தது. முதலில் பார்த்த கால்பந்தாட்டத்தில் பந்துக்குள் இருந்ததும் காற்றுதான். இங்கே புல்லாக்குழலில் இருந்து வெளிப்படுவதும் காற்றுதான். ஆனால் அங்கே அது உதைபடுகிறது. இங்கே ரசிக்கப்படுகிறது. ஏன் இந்த நிலை? நாரதருக்கு சந்தேகம் வந்தால் எங்கே போவார்? வேறு எங்கே, வைகுந்தம்தான். அங்கே போய் திருமாலைப் பார்த்தார். திருமகளும் அவள் நாயகனும் என்ன என்பதுபோல் பார்க்க, திருதிரு என்று விழித்தபடியே தன் சந்தேகத்தைச் சொன்னார், நாரதர். புன்னகைத்தார், புருஷோத்தமன். நாரதா, கால்பந்து, காற்றைத் தனக்கு மட்டுமே சொந்தமாக உள்ளேயே அடைத்து வைத்துக்கொண்டது. அதனால் அது உதைபடுகிறது. ஆனால், புல்லாங்குழல் தனக்குள் வரும் காற்றை, சுயநலமாகத் தானே வைத்துக்கொள்ளாமல் பிறருடன் பகிர்ந்து கொள்கிறது. அதனால் அது ரசிக்கப்படுகிறது! புரிந்ததா? என்று சொல்லிச் சிரித்தார். நாதா, சுயநலத்தோடு சேர்ப்பவை வெறுக்கப்படும், கிடைப்பதை பிறரோடு பங்கிட்டுக் கொள்வது ரசிக்கப்படும் என்ற நீதியை உங்கள் திருவாயால் கூறவேண்டும்; அது மக்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகவே நாரதன் இப்படி ஒரு சந்தேகத்தை உங்களிடம் கேட்டிருக்கிறான்! அப்படித்தானே நாரதா? கேட்ட மகாலட்சுமியைப் பார்த்து ஆம் தாயே என்பதுபோல் தலையசைத்துவிட்டு நகர்ந்தார், நாரதர். |
|
|
|