|
வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று ஊர் திரும்பிய வணிகன் ஒருவன், தனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ந்தான்; அலறித் துடித்தான். அப்போது அவனின் மூத்த மகன் ஓடி வந்து, தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்துக்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்றான். அதைக் கேட்டதும் வணிகனின் சோகம் காணாமல் போனது. இப்போது அவனும் கூட்டத்தில் ஒருவனாக வேடிக்கைப் பார்க்கத் துவங்கினான்.
சிறிது நேரத்தில் இரண்டாவது மகன் ஓடிவந்து, தந்தையே! வீட்டுக்கு முன்பணம்தான் வாங்கியிருக்கிறோம். முழுத்தொகை இன்னும் வந்துசேரவில்லை என்றான். வணிகன் அதிர்ச்சியில் உறைந்தான். மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். சில மணித் துளிகளில், மூன்றாவது மகன் ஓடிவந்தான். தந்தையே! இந்த வீட்டை வாங்கிய மனிதர் மிகவும் நல்லவர் போலும். வீட்டை வாங்க முடிவு செய்தபோது, அது தீப்பிடித்து எரியும் என்று யாருக்கும் தெரியாது. ஆகவே, பேசியபடி முழுத்தொகையையும் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் என்றான். இப்போது வணிகனின் சந்தோஷம் மீண்டது.
இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு, அதே நெருப்பு! இது என்னுடையது என்று நினைக்கும்போது, அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையது அல்ல என்று நினைக்கும்போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. நான், என்னுடையது, எனக்குச் சொந்தமானது என்ற எண்ணம்தான் பற்று. உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. அனைத்துமே அழியக்கூடியவை அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாகக் கூடியவை. இதை நினைவில் நிறுத்தினாலே போதும்; சோகத்துக்கும் துன்பத்துக்கும் வேலையிருக்காது. |
|
|
|