|
கடலில் கப்பல் ஒன்று போய்க்கொண்டிருந்தது. பக்தர் ஒருவர் அதில் பயணம் செய்தார். நடுக்கடலில், சூறாவளிக் காற்றில் கப்பல் சிக்கிக்கொண்டது! கரையைத் தொடுவோமா? என்ற கவலை எல்லோரையும் பற்றிக்கொண்டது. கப்பலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கப்பல் திசைமாறிப் போனது. ஏதாவது பாறையில் மோதி மூழ்கிவிடுமோ? என்கிற நிலைமை. பக்தர் ஒருவர் கண்களை மூடினார். கடவுளை நினைத்து வேண்டினார். கடவுளே... எப்படியாவது என்னைக் காப்பாற்றிவிடு! நான் உயிர் பிழைத்து ஊர் போய்ச் சேர்ந்து விட்டால் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மாளிகையை உனக்குக் காணிக்கையாக்குகிறேன்! அவரது வேண்டுதல் பலித்தது. புயல் ஓய்ந்தது. கப்பல் பத்திரமாகக் கரைக்கு வந்து சேர்ந்தது. கரையேறிய பக்தர் யோசித்தார்.
கப்பலில் என்னோடு ஏராளமானவர்கள் பயணம் செய்தனர். அவர்களும் பத்திரமாகக் கரையேறியிருக்கிறார்கள். நான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனோ? ஆண்டவனுக்கு அப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருக்க வேண்டியதில்லையோ? பக்தரின் சிந்தனை தொடர்ந்தது. எப்படி இருந்தாலும் பிரார்த்தனையில் இருந்து பின்வாங்க முடியாது. அதை நிறைவேற்ற வேண்டியது உண்மையான பக்தனின் கடமை. என்ன செய்யலாம்? முடிவாக, அவர் ஓர் ஏற்பாடு செய்தார். அந்த மாளிகையை ஏலம் விடுவதாக அறிவித்தார். ஏலம் கேட்க எல்லோரும் வந்து கூடினார்கள். அவர் சொன்னார்: இந்த மாளிகையின் விலை ஒரு ரூபாய். இதன் தூணில் கட்டப்பட்டிருக்கும் பூனையின் விலை ஒரு கோடி ரூபாய். இரண்டையும் சேர்த்தே நீங்கள் ஏலம் கேட்க வேண்டும்! ஏலம் கேட்டார்கள். விற்பனை முடிந்தது. கடவுளே! நான் சொன்னபடியே எனது மாளிகையை ஏலம் விட்டு அதற்குரிய தொகையை இதோ உனது உண்டியலில் சேர்த்துவிட்டேன்! என்றபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டுவிட்டு அந்த பக்தர் கம்பீரமாக வெளியே வந்தார். இன்றைய பக்தி, கடவுளையும் வியாபாரப் பொருளாக்கி விடுகிறது! |
|
|
|