|
இதை விட அது உயர்ந்தது, அதை விட இது உயர்ந்தது என, ஒப்பிட்டுப் பார்ப்பதிலேயே, மனம் ஈடுபட்டு, உயர்ந்தவைகளை ஒதுக்கி, உதவாதவைகளைத் தேர்ந்தெடுப்பது மனித இயல்பு. ராவணன் முடிவிற்கு பின், விபீஷணர், இலங்கை மன்னராக பொறுப்பேற்று, ஆட்சி செலுத்திய நேரம் அது! ஒவ்வொரு ஏகாதசியன்றும் திருவரங்கம் வந்து, அரங்கநாதரை பூஜிப்பதை வழக்கமாக வைத்திருந்தார், விபீஷணர். அவ்வாறு வந்து போவதை அறிந்த அடியார் ஒருவர், ஒருநாள், விபீஷணர் வருகையை எதிர்பார்த்து, காத்திருந்தார். அப்போது கோவிலுக்கு வந்த விபீஷணர், தான் கொண்டு வந்திருந்த பூக்குடலையிலிருந்து, மலர்களை எடுத்து, வழிபாட்டை முடித்தார். அந்நேரம் பார்த்து, விபீஷணரின் பூக்குடலைக்குள் ஒளிந்து கொண்டார் அடியார். விபீஷணரை பொறுத்த வரை, அந்த அடியார், அவருக்கு தூசு போலத் தான்; கனம் தெரியாது. அதனால், இறைவனை வணங்கிய பின், பூக்குடலையுடன் புறப்பட்ட விபீஷணருக்கு கனம் தெரியவில்லை.
இலங்கைக்கு சென்றவுடன், தன் கையில் இருந்த பூக்கூடையை கீழே கவிழ்த்தார் விபீஷணர்; அதிலிருந்து, அடியார் கீழே விழுந்தார். அவரை பார்த்தவுடன், விபீஷணர் மட்டுமல்லாது, அங்கிருந்த அரக்கர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அடியாருக்கோ, அரக்கர்களை பார்த்ததும், உடல் நடுங்கத் துவங்கியது. விபீஷணர், அவரை நோக்கி, அப்பா... நீ யாராக இருந்தாலும் சரி; உன் தைரியத்தை, பாராட்டுகிறேன்; உனக்கு, என்ன வேண்டும் கேள், தருகிறேன்... என்றார். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த அடியார், அங்கே பார்வையை சுழற்றினார். பார்த்த இடமெங்கும் பவழங்களும், ரத்தினங்களும், மாணிக்கங்களும், முத்துக்களுமாக கொட்டிக் கிடந்தன. அவற்றைப் பார்த்து வியந்தார், அடியார். அவற்றிலிருந்து எவ்வளவு கேட்டாலும் கொடுத்திருப்பார், விபீஷணர். ஆனால், அடியாரோ, இவ்வளவு விலை உயர்ந்தவைகளே இப்படி அலட்சியமாகக் கிடக்கிறதே... அப்படியெனில் விலை மதிக்க முடியாதது, எவ்வளவு இருக்கும்... என்ற பேராசையில், மன்னா... உண்மையிலேயே நீங்கள் எனக்கு கொடுப்பதாயிருந்தால், இந்த இலங்கையிலேயே, மிகவும் விலை மதிக்க முடியாதது எதுவோ, அதைத் தாருங்கள்... என்று கேட்டார். கண்களுக்கெதிரில் கொட்டிக் கிடப்பதை விட்டு விட்டு, என்னவென்றே தெரியாத ஒன்றின் மேல் ஆசைப்பட்ட அந்த அடியாரின் வேண்டுகோளை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார், விபீஷணர். அதன்படி, பொக்கிஷ அறையின் நிர்வாகி, ஒரு பெரிய பெட்டியை எடுத்து வந்து திறந்து, அதிலிருந்த ஒரு சிறிய ஊசியை, அடியார் கையில் கொடுத்து, இந்நாட்டிலுள்ள, ஒரே இரும்புப் பொருள் இதுதான்; நாங்கள் மிகவும் உயர்வாக நினைத்த இதை, உங்களுக்கு தருகிறோம்... என்றார். கையில், ஊசியை வாங்கிய அடியாருக்கு, மனம் படாதபாடு பட்டது. அதற்குள், அவரை அரக்கன் ஒருவன் சுமந்து வந்து, பழையபடி, அவர் இருந்த இடத்திலேயே, விட்டு போய் விட்டான். விவரம் அறிந்து, ஊரே சிரித்தது. கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையாமல், பேராசைப்படுபவன் நிலையை விளக்கும் கதை இது! |
|
|
|