|
ஒரு ஏரிக்கரையில் பரந்து விரிந்த ஆலமரம் ஒன்று இருந்தது. அதுவே பறவைகள்
பலவற்றின் சரணாலயமாக விளங்கியது. அங்கே ஒரு வித்தியாசமான பறவையும் வசித்து
வந்தது. அது ஒரு உடல், இரு தலையுடன் காட்சியளித்தது. இரண்டு தலைகள்
இருந்தாலும், அவை ஒன்றுக்கொன்று ஒற்றுமையுடன் பழகி வந்தன. உண்பதற்கு ஏதாவது
உணவு கிடைத்தால் அதை ஒரு தலை மட்டும், லபப்... லபக்... என்று
விழுங்காமல், மற்றொரு தலைக்கும் பகிர்ந்து அளிப்பதை வழக்கமாக
கொண்டிருந்தது. இப்படி இரண்டும் அதிக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. இது கால
பகவானுக்குப் பிடிக்கவில்லை போலும். ஒருநாள், ஒரு விரும்பத்தகாத சம்பவம்
நிகழ்ந்தது. மரத்தின் கிளையில் சந்தோஷமாக அந்தப் பறவை அமர்ந்திருந்த போது,
தற்செயலாக, அதன் ஒரு தலை கீழே பார்த்தது. அங்கே ஒரு பழம் கிடந்தது. அது,
இதுவரை பார்த்திராத ஒரு பழமாக இருந்தது. என்ன பழம் அது? புதிதாக
இருக்கிறதே! சுவை எப்படி இருக்குமோ? என்றெல்லாம் உள்ளுக்குள் யோசித்தது.
அதை உண்டு பார்க்கலாம், என்று நினைத்து, கீழே பறந்து வந்தது.
எதற்காக
இப்படி அவசரமாக கீழே இறங்குகிறது என்பது தெரியாமல் குழம்பியது மற்றொரு
தலை. வேறு எந்த பறவையும் அந்தப் பழத்தை கவ்விச் செல்வதற்கு முன்பாக அதை தன்
வாயில் கவ்வியது. எதற்காக வேகமா கீழே பறந்து சென்றது என்ற உண்மை.
இரண்டாவது தலைக்கு அப்போதுதான் புரிந்தது. அந்தப் பழத்தை சிறிதாக மென்று
சுவைத்து பார்த்தது. ருசி என்றால் அப்படியொரு ருசியாக இருந்தது. அந்தப்
பழம் முழுவதையும் அப்படியே சுவைத்து உண்டு விட வேண்டும் என்ற ஆசை அதற்கு
ஏற்பட்டது. அதே நேரத்தில், மற்றொரு தலையோ வழக்கம்போல தனக்கும் ஒரு பங்கு
கிடைக்கும் என்று காத்திருந்தது. ஆனால், அந்தத் தலையோ பழம் முழுவதையும்
தானே வேகமாக உண்ணத் துவங்கியது. ஏய்... நீ மட்டும் தின்கிறாயே... எனக்கும்
கொடு என்று கெஞ்சி கேட்டது மற்றொரு தலை. ஆனால், அந்தத் தலையோ பழத்தின்
சுவையில் மயங்கி, நம்மிருவருக்கும் உடல் ஒன்று தானே? நான் சாப்பிட்டால்
என்ன, நீ சாப்பிட்டால் என்ன? என்று எதிர்கேள்வி கேட்டதோடு, பழத்தை உண்டு
முடித்து விட்டது. இவ்வாறு தான் மட்டும் பழத்தை சாப்பிட்டதால், மற்றொரு
தலைக்குக் கோபம் வந்தது. இதனால் அவ்விரு தலைகளுக்கும் இடையே பகை ஏற்பட்டது.
எப்படியாவது
ஒருநாள் சரியான தருணம் பார்த்து அந்தத் தலையைப் பழிவாங்கிவிட வேண்டும்
என்று உள்ளுக்குள் கறுவியது ஏமாந்த தலை. அப்படியே ஒரு நாளும் வந்தது. அன்று
விஷக் கனி ஒன்றை, ஏமாந்த தலை பார்த்தது. அந்தத் தலையைப் பழிவாங்க இதுதான்
சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தது. உடனே, வேகமாக அந்தக் கனியை சுவைக்க
விரைந்தது. எதற்காக இப்படி வேகமாகப் பறக்கிறது என்பது தெரியாமல், அந்தத்
தலை குழப்பத்தில் இருந்தபோது, அந்த விஷக் கனியை உண்பதற்குத் தயாரானது
ஏமாந்த தலை. டேய் அதைச் சாப்பிடாதே விஷக் கனி அது. இருவருமே இறந்து
போய்விடுவோம், என்று பதற்றத்தில் கத்தி கூச்சலிட்டது. எனக்கு ஒரு கண்
போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்ற
பழிவாங்கும் உணர்ச்சியில் இருந்த ஏமாந்த தலை, அந்த விஷக் கனியை உண்டது.
அடுத்த நொடிப் பொழுதில் அந்தப் பறவையின் இரு தலைகளுமே தொங்கி விழுந்து
மடிந்தது. |
|
|
|