|
பிரம்மபாந்தவர் (பவானி சரண் பானர்ஜி) மேற்கு வங்கம் ஹூக்ளியில் உள்ள கன்யான் என்ற ஊரில் பிறந்தார். இவர் புகழ் பெற்ற தேச பக்தர். பத்திரிக்கையாளர், அறிவுஜீவி. ஸ்ரீராமகிருஷ்ணர் சன்னிதியில். பிரம்மபாந்தவர் புத்திசாலி மாணவர், ஜெனரல் அசெம்பிளி கல்லுரியில் முதல் கலை வகுப்பில் நரேந்திரரின் (விவேகானந்தரின்) வகுப்புத் தோழர். 1881- இல் பிரம்மபாந்தவருக்கு, கேசவ சந்திர சென்னுடன் தொடர்பு ஏற்பட்டது. அவருடன் தட்சிணேஸ்வரம் சென்று 1882-இல் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தரிசித்தார். பிறகு அவர் அங்கு செல்லும்போதெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணரின் உரையாடல்களையும் அவரது பரவசநிலைகளையும் நேரில் கண்டார். இவர் இளைஞராக இருந்தபோது ஆன்மிகம் - ஒழுக்கம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக இளைஞர்களின் கூடு என்ற அமைப்பை உருவாக்கினார்.
இந்த அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுடன் பிரம்மபாந்தவர் அடிக்கடி தட்சிணேஸ்வரம் சென்று, கங்கையில் நீராடி ஸ்ரீராமகிருஷ்ணரைத் தரிசிப்பது வழக்கம் குருதேவரும், அவர்களை வரவேற்று அவர்கள் உண்பதற்கும் ஏதாவது அளிப்பார். சன்னியாச விரதம்: ரவீந்திரநாத்தாகூர் போல்பூர் என்ற இடத்தில் பிரம்மசரிய ஆசிரமம் நிறுவினார். அங்கு பிரம்மபாந்தவர் சில காலம் ஆசிரியராகப் பணி புரிந்தார். நவவிதான் பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்த, கவுர்கோவிந்தராயிடம் 6.1.1887 அன்று பிரம்ம சமாஜ தீட்சை பெற்றார். பிரம்மபாந்தவர் இந்து சமயத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் அவர், இயேசுவின் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தார். 1894 டிசம்பரில் சன்னியாச விரதம் பூண்டு பிரம்மபாந்தவ உபாத்யாயர் என்று பெயர் வைத்துக் கொண்டார். ஒரே சமயத்தில் அவர் பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவராகவும், புரோட்டஸ்டண்டாகவும், ரோமன் கத்தோலிக்கராகவும், இறுதியில் வேதாந்தச் சிந்தனைகளைக் கொண்ட கத்தோலிக்கராகவும் இருந்தார். சுவாமிஜியின் தாக்கம்: சுவாமிஜியின் மறைவுக்குப்பிறகு அவரது லட்சியங்களின் தாக்கம் காரணமாக பிரம்மபாந்தவர் 5.10.1902 அன்று இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு அவர் இந்துமதம் தத்துவம், கலாச்சாரம் சமூக அறிவியல் ஆகியவை குறித்து, ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் பல சொற்பொழிவுகள் செய்தார்.
பிறகு அவர், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அப்போது அவர் ராணுவப்பயிற்சியும் பெற விரும்பினார். ஆனால் அது நடைபெறவில்லை. சந்தியா பத்திரிகையின் சிங்க கர்ஜனை: பிரம்மபாந்தவர் பாரதம் திரும்பியதும், 1903 ஜூனில் சந்தியா என்ற தேசிய நாளிதழைத் துவக்கினார். அதில் அனல் பறக்கும் தலையங்கங்கள், மனதைத் தொடும் கட்டுரைகள் மூலம் ஆங்கில அரசை மிகக் கடுமையாகத் தாக்கினார். அந்நாளில் ரௌலட் கமிட்டி அறிக்கையில், வங்காளத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான பயங்கரவாதம் சந்தியா பத்திரிகையால் ஏற்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பிரம்மபாந்தவர், வங்கப் பிரிவினையை எதிர்த்த இயக்கத்தில் முன்னணியில் இருந்தார். அவர், சுவராஜ் என்ற வார இதழின் ஆசிரியராகவும் இருந்தார். சுவாமி விவேகானந்தரின் தம்பி பூபேந்திரநாத் தத்தர் யுகாந்தர் என்ற பத்திரிகையின் ஆசிரியர். இந்தப் பத்திரிகையும், ஆங்கிலேயருக்கு எதிரான தீவிரவாத தேசியத்தைப் பிரச்சாரம் செய்தது. எனவே ஆங்கிலேய அரசு, பூபேந்திரநாத் மீது குற்றம் சுமத்தி அவரைக் கைது செய்தது. அப்போது சந்தியா பின்வருமாறு எழுதியது.
இப்போது ஆங்கிலேயருக்கு நாகப்பாம்பின் வாலை மிதிக்கவும் துணிவு வந்துவிட்டது. இந்த ராஜதுரோக வழக்கு ஒரு பெரிய நெருப்பையே கிளப்பிவிடப் போகிறது. ஆங்கிலேயர்களான உங்களுக்குத் தோல் தடித்துப் போய்விட்டது என்பதை நாங்கள் அறிவோம். உங்களால் நாசூக்கான வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் வங்காளிகளோ இப்போது உங்கள் கணக்கை முடித்துவிடவே விரும்புகிறார்கள். ராஜதுரோக வழக்கு: அவர் 1907 ஆகஸ்ட் 13 ஆம் தேதி சந்தியா இதழில், ஆங்கிலேயே அரசை மிகவும் கடுமையாக விமரிசித்து ஒரு கட்டுரை எழுதினார். அதைக் காரணம் காட்டி, ஆங்கிலேய அரசு பிரம்மபாந்தவர் மீது ராஜதுரோகக் குற்றம் சுமத்தியது. அதன்படி பிரம்மபாந்தவர் சந்தியா இதழின் ஆசிரியர் என்ற முறையில் ஆங்கிலேயே அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 10.9.1907 அன்று கைது செய்யப்பட்டார். 1907 செப்டம்பர் இறுதியில் வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது பிரம்மபாந்தவரிடம் நீதிபதி, நீ குற்றவாளியா, இல்லையா? என்று கேட்டார்.
அப்போது பிரம்மாந்தவர் கூறிய பதில்: சந்தியா பத்திரிகையின் வெளியீடு, அதன் நிர்வாகம் அதன் செயல்கள் ஆகிய எல்லாவற்றிற்கும், நானே முழுப் பொறுப்பு. இந்த வழக்குக்கு உரிய எக்கான் தேகே கெங்கி பிரேமர் தாய் (நான் இப்போது பிரேமையில் மூழ்கியிருக்கிறேன்) என்ற கட்டுரையை நான் தான் எழுதினேன். ஆனால் இந்த விசாரணையில் நான் எந்த விதத்திலும் பங்கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனெனில், இறைவன் எனக்கு அளித்திருக்கும் இந்த சுயராஜ்யப் பணியை நிறைவேற்றி வருவதில் எங்களை ஆண்டு வரும் அந்நியர்களுக்குப் பதில் அளிக்க நான் எந்த விதத்திலும் கடமைப்பட்டவன் என்று என்னை நான் கருதவில்லை. பிரம்மபாந்தவரின் துணிவு மிக்க பதிலைக் கேட்டு நீதிபதியே திடுக்கிட்டார். அவர் அப்போதே பிரம்மபாந்தவருக்கு தண்டனை அளித்திருக்கலாம். ஆனால் நீதிபதி, பிரம்மபாந்தவர் வங்காளத்தில் மிகப் பெரிய ஒரு தேசியத் தலைவர் என்பதால், விசாரணை என்ற பெயரில் ஒரு போலி நாடகம் நடத்தித் தண்டனை அளிப்பது என்று முடிவு செய்தார்.
அதனால் அவர் வழக்கை ஒத்தி வைத்தார். வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, பிரம்மபாந்தவர் விரைவீக்க நோயால் அவதிப்பட்டார். நீதிமன்றத்தில் விசாரணைக்காகப் பல மணி நேரம் நின்றதால், அவரது நோய் மேலும் அதிகமாயிற்று. அதனால் அவரை கேம்ப்பெல் மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவமனையில் இருந்தபோது, அவர் இவ்விதம் கூறினார். நான் ஒரு கைதியாக வேலை செய்வதற்கு, ஆங்கிலேயரின் சிறைச்சாலைக்குள் செல்லமாட்டேன். நான் என்றைக்கும் யாருடைய ஆணைக்கும் கீழ்ப்படிந்ததில்லை. எனது வாழ்க்கையின் அந்திமக்காலத்தில் என்னை ஆங்கிலேய அரசு சிறைக்கு அனுப்பி, ஒன்றும் இல்லாததற்காக என்னைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்க விரும்புகிறது. நான் சிறைக்குச் செல்லமாட்டேன். எனக்கு இறைவனின் அழைப்பு வந்துவிட்டது. இவ்விதம் கூறிய அவர், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே, கேம்ப்பெல் மருத்துவமனையில் 27.10.1907 அன்று காலமானார். அவரது விருப்பப்படியே அவரது சடலம் தகனம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பிரம்மபாந்தவர் தன் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவியர், சுவாமி விவேகானந்தர் ஆகியவர்களின் மீது பெரிதும் பக்தி கொண்டிருந்தார். அந்தப் பக்தியை அவர் தன்னுடைய மிகவும் உயர்ந்த உணர்வுபூர்வமான கட்டுரைகளிலும், சொற்பொழிவுகளிலும் வெளிப்படுத்தினார்.
|
|
|
|