|
உலகில் வாழும் மனிதர் எவரும் தனியாக வாழ்வதில்லை. வாழ விரும்புவதும் இல்லை. வாழவும் முடியாது. சமூகத்தில் வாழும்போது தனக்கு ஏற்ற ஒருவருடன் ஆவது பலருடனாவது நட்பு கொண்டுதான் வாழ்கிறோம். அன்பு ஒன்று. பல நிலையில் பல பெயர்களைப் பெறும்போது ஒத்த ஒருவருடன் கொள்ளும் அன்பு நட்பு எனப்படுகிறது.
நட்புப் பற்றி பல நூல்களும் பல வகையான அளவில் விரிவாகப் பேசுகிறது. உலகப் பொது மறை என்று எல்லோராலும் போற்றப்படுவதும். பல மொழிகளிலும், மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும். திருமணமானாலும், அரசியல் ஆனாலும் எந்த மேடையானாலும் எடுத்தாளப்படுவதுமான திருக்குறளை இயற்றியருளிய வள்ளுவர் பெருந்தகை நட்பு. நட்பாராய்தல், தீய நட்பு, கூடாநட்பு, என்றெல்லாம் பலவகையாக அதிகாரங்களை வகுத்தும் பிரித்தும் பேசுகிறார்.
சிறந்து விளங்கும் இதிகாசங்களான இராமாயண, மகாபாரதத்திலும், பல கதாபாத்திரங்கள், ஒருவரிடம் மற்றொருவர் கொண்ட நட்புப் பற்றியும், நாம் பல ஆண்டுகளாக பேசியும் கேட்டும் வருகிறோம்.
கர்ணனும் துரியோதனனும் கொண்ட நட்பு துரோணரும் துருபதனும் கொண்ட நட்பு, கண்ணனும் குசேலனும் கொண்ட நட்பு. இராமபிரானும் குகனும் கொண்ட நட்பு எனப் பலவகையாகப் பார்க்கிறோம்.
மனித மனம் சார்ந்ததன் வண்ணமாதல் என்ற அடிப்படையில் மாறும் தன்மை கொண்டது என்பர் பெரியோர். வள்ளுவரும்.
நிலத் தியல்பால் நீர் திரிந்தற்றாகும், மாந்தர்க்கு இனத் தியல்பதாகும் அறிவு என்பர்.
பெரியோரிடம் நட்புக் கொண்டால் அவர் குணம் நமக்கு வரும் என்று குமரேசர் சதகச் செய்யுள் பல உவமானங்களுடன் எடுத்து விளக்குவது இங்கு நோக்கத்தக்கது.
சந்தன மரத்துடன் சேர்ந்த பிற மரங்களும் சந்தனத்தின் மனத்தையே பெறும், மேருமலையை அடைந்த காக்கையும் பொன்நிறம் பெறும், பாலுடன் கலந்த நீரும் பாலின் நிறத்தையே பெறும், ஸ்படிக மணியினுள் செல்லும் நூல், அந்நிறத்தையே காட்டும், மரகதக் கல்லுடன் சேரும் பொருள்களும், பச்சை நிறத்தையே பெறும், பெரியோருடன் சேர்ந்தால், அவர்களுடைய குணம் நமக்கு வரும் என்று கூறுகிறார் குமரேச சதக ஆசிரியர்.
நாம் நட்புக் கொள்ளும்போது யாருடன் நட்புக் கொள்கிறோமோ அவரது குணம், குற்றம் அவர் யாருடன் நட்புக் கொண்டிருக்கிறார் என்று எல்லாவற்றையும் நன்றாக ஆராய்ந்து. நட்புக் கொள்ள வேண்டும் என்பார் வள்ளுவர்.
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இன்னும் அறிந்தி யாக்க நட்பு.
என்பது அவரது பொன்னான வாக்கு.
அப்படி நட்புக் கொள்ளும் போது சிலர், வெரும் பொழுது போக்காகவும், பிறரைப் பற்றிக் குற்றம் குறைகளைப் பேசி தம் நேரத்தை வீணடிப்பதையும் அவர் பார்த்திருப்பார் போலும் நட்புக் கொள்வது சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல, ஒருவர் தவறு செய்வாரானால் அவரை இடித்துக் கூறித் திருத்துவதற்காகவே என்று மிக விளக்க மாகக் கூறுகிறார்.
நகுதற் பொருட்டன்று நட்டல், மிகுதிக் கண்’ மேற் சென்றிடித்தற் பொருட்டு
என்பது அப்பாடல்.
இவ்வளவு சொன்னவர், ஆராயாது நட்புக் கொண்டால் வரும் தீங்கையும் மிகுந்த கவனத்துடன் குறிப்பிடுகிறார். நட்புக் கொள்ளும் போது எல்லாவற்றையும் கண்டு ஆராய வேண்டும். ஒரு முறைக்கு பல முறை யோசியாமல், திடீர் நட்புக் கொள்வதில் அது, தான் சாகும் வரையான துன்பத்தைக் கூட தந்து விடும் என்று எச்சரிக்கிறார்.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான் சாந் துயரம் தரும்.
என்பது அவரது தெய்வ வாக்கு.
ஆகவே, கூடி வாழும் மனித இனம் நல்லவர்களுடன் நட்புக் கொண்டு வாழ வேண்டும். தமக்கு நல்லது செய்து கொள்ளுவதுடன், நட்புக் கொண்டவர்க்கும் நன்மை ஏற்பட வேண்டும். நாட்டுக்கும் மற்றவர்க்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்பதை உணர்ந்து நல்லவர்களுடன் தக்கவர்களுடன் நாம் நட்புக் கொள்வோமாக.
|
|
|
|