|
ஆசிரமத்தருகே ஏழைச்சிறுவன் ஒருவன் வசித்தான். துறவிகளை அடிக்கடி சந்திப்பதால் அவன் மனமும் துறவு ஏற்க விழைந்தது. ஒருநாள் அந்த ஆசிரமத்திலிருந்த தலைமைத் துறவியைச் சந்தித்து, நான் ஏழை அனாதை, பெரிய அறிவும், படிப்பும் இல்லாதவன். ஆனாலும் எனக்கும் தங்களைப் போல் துறவு மேற்கொள்ள விருப்பமுள்ளது! என தன் விருப்பத்தைச் சொன்னான் சிறுவன். அவனைப் பற்றி விசாரித்ததில், சதுரங்கம் விளையாடுவதில் அவன் தனித்திறமைப் பெற்றவன் என்பதை தெரிந்துகொண்டார் தலைமைத் துறவி. ஆசிரமத்தில் உள்ள இளம் துறவி ஒருவரை அழைத்து, செஸ் விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு வரச் சொல்லி, அவை வந்ததும், இந்த சிறுவனோடு விளையாட அந்தத் துறவியைப் பணித்தார். அப்போது, உங்கள் இருவரில் யார் தோற்றாலும், அவர்களை என் கையிலுள்ள வாளினால் வெட்டிவிடுவேன் என்று ஒரு நிபந்தனையும் விதித்தார்.
ஆட்டம் ஆரம்பமானது. துறவியின் நிபந்தனையைக் கேட்டு மிரண்ட சிறுவன், விளையாட்டில் சில தவறுகளைச் செய்தான். பின்னர், இந்தப் பதட்டம் தேவையில்லாத ஒன்று. நடப்பவை நாராயணன் செயல். என் பங்கு விளையாட்டை நன்றாக ஆடவேண்டும் என்பதே என்னிடம் இறைவன் எதிர்பார்ப்பது. வெற்றி, தோல்விகள் இறைவனின் விருப்பப்படி நிகழும் என யோசித்தான். அதன் பின்னர் முழுமையான ஈடுபாட்டோடு விளையாடியதில் அவன் வெற்றி பெறும் நிலை வந்தது.
நிபந்தனைப்படி இளந்துறவி தோற்றுவிட்டால், அவரை தலைமைத் துறவி வெட்டி விடுவார் எனப் புரிந்தது. அவன் மனம் யோசிக்கிறது. வேத விளக்கங்கள் கற்று, துறவு மார்க்கங்களில் தேர்ச்சி பெற்றவனாய் தான் வாழும் சமுதாயத்திற்கு நல்லநெறிகளை கூறக்கூடியவன் இத்துறவி. இவரைப் போன்றோர் ஏன் மாள வேண்டும்? அறிவில்லாத தற்குறி நான். அநாதையான என் வாழ்க்கையால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. நான் உயிரிழப்பதே சரி என முடிவெடுத்து, வேண்டுமென்றே தவறாய் காய் நகர்த்த இளந்துறவி வெற்றி பெறுகிறார்.
தன் தலைமேல் கத்தியை எதிர்பார்த்து தலை குனிந்திருந்த அவன் மீது துறவியின் அருள்பார்வைபட, அவன் கழுத்தில் அழகிய மாலை ஒன்று விழுகிறது. நீ தோற்று விட்டதாகவா எண்ணிக்கொண்டிருக்கிறாய்? நீ தான் வெற்றி பெற்றாய். துறவு என்பது வாழும் நெறி அல்ல, மனத்தின் வழி. மனம் துறவை நாடி, அதில் லயிக்கும் போது, உடல் பாழ்படும். நிபந்தனைக்கு அஞ்சி நீ ஆரம்பத்தில் சில தவறுகளை விளையாட்டில் செய்தாலும் பின்னர் உன் மனதை ஒரு நிலைப்படுத்தி ஆட்டத்தை வலுப்படுத்திக் கொண்டது, மகா பிரக்ஞை என்கிற ஆன்மிகத்தின் பாலபாடம். ஆனால், தான் வெற்றி பெற்று, பெருமைபடட்டும் என எண்ணாமல் எதிரொளிக்கு கஷ்டம் வந்து விடுமோ என யோசித்தது உன் கருணை மனம். அதனால் வேண்டுமென்றே தவறு செய்து, அவரை வெற்றியடைச் செய்வது துயவறத்தில் மகா கருணை எனப்படும் ஆன்மிகப்பாடம். துறவு கொள்வோரின் உயர் எண்ண அலைகள் இயல்பாகவே உன்னில் உள்ளன. இந்த ஆசிரமத்திற்கு உன்னை வரவேற்கிறேன்! என அவனை சீடனாகச் சேர்த்துக்கொண்டார் துறவி.
|
|
|
|