Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தவளைப் பெண் செய்த தவறு!
 
பக்தி கதைகள்
தவளைப் பெண் செய்த தவறு!

இக்ஷ்வாகு குலத்தரசன் ஒருவன் கோஸல நாட்டை ஆண்டு வந்தான். அவன் பெயர் பரீக்ஷித். அயோத்தி அந்நாட்டிற்குத் தலைநகர். ஒரு நாள் அவ்வரசன் வேட்டையாட விரும்பித் தன் சேனையுடன் காடு சென்றான். குதிரையேறி வேட்டையாடிய அவ்வரசன் ஓர் மானைப் பின் தொடர்ந்தான். நெடுந்தூரம் தனியாய்ச் சேனையைப் பிரிந்து சென்று விட்டான். களைத்துச் சோர்ந்தான். பசியும் வறட்சியும் அவனை வாட்டின ஓரிடத்தில் அடர்ந்து இருண்டதோர் பெரும் மரக்கூட்டத்தைக் கண்டான். விரைந்து சென்றான். அதனிடையில் மிகவும் அழகியதோர் குளமிருந்தது. குதிரைமேலிருந்த வண்ணமே அக்குளத்தில் இறங்கினான். தாமரை நூல்களைத் தின்றான். தண்ணீர் பருகினான். சோர்வு நீங்கினான். குதிரையைக் கட்டித் தாமரைத் தண்டுகளை அதனெதிரில் போட்டுவிட்டுக் குளக்கரையில் உட்கார்ந்தான். படுத்துக் கொண்டான். இனிய பாட்டொலியொன்று அவன் செவியில் நுழைந்தது. மனிதர் நடையாட்டமில்லாத இவ்விடத்தில் இப்பாட்டொலி எவ்வாறு வருகின்றது. இது யாருடையதாயிருக்கும் என்று ஆலோசித்தான்.

மிகவும் அழகிய இளநங்கை ஒருவள் பூக்கள் கொய்து கொண்டே ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் அவ்விடம் வந்தாள். அரசன் அவளைப் பார்த்தான். அவளும் அரசனை அணுகினாள்.

அரசன்: அழகியே! நீ யார்? யாரைச் சேர்ந்தவள்?

பெண்: நான் ஒரு மணமாகாத கன்னிப்பெண்.

அரசன்: யான் உன்னுடன் இன்புற விரும்புகிறேன்.

பெண்: நியமம் ஒன்று உண்டு. அதற்குத் தாங்கள் உடன்பட்டால் என்னையடையலாம். இன்றேல் இயலாது.

அரசன்: அக்கட்டுப்பாடு என்னவென்று கூறு.

பெண்: வேறொன்றுமில்லை. மிகவும் எளியதே. நீரையெனக்குக் காட்டல் கூடாது.

அவ்வாறே ஆகுகவென்று அரசன் உறுதியளித்தான். அவளையடைந்தான். அவளுடன் வெகுநேரம் அக்குளக்கரையிலேயேயிருந்தான்.

அரசனை தேடித்திரிந்த சேனை குதிரையின் அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வந்து அவனைக் கண்டு சூழ்ந்து நின்றது. அரசனும் அதற்குள் நன்கு இளைப்பாறியிருந்தான். மட்டிலா மகிழ்வுற்ற மன்னன் தானும் தன் புதிய காதலியுமாகப் பல்லக்கிலமர்ந்து தன் சேனையுடன் தலைநகரையடைந்தான். தனித்ததோர் உவளகத்தால் பிறரெவருமறியாவண்ணம் தன் புதிய காதலியுடன் சிற்றின் பச்சுவையில் திளைத்துக் கொண்டிருந்தான். பிற காரியமெதையும் அவன் கவனிக்கவில்லை. பணிப்பெண்கள் அக்காதலர்க்கு வேண்டிய பணிவிடைகள் புரிந்து கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அமைச்சர் அரசனைக் காண அவ்வுவளகம் சென்றார். காதலியுடன் அங்கு அரசன் இருப்பது அமைச்சருக்குத் தெரியும். அங்கு அருகில் இருந்த சில பணிப்பெண்களைப் பார்த்து நீங்கள் இங்கு புரியும் பணிவிடையென்ன? என்று கேட்டார். எவரும் இங்கு நீர் கொண்டு வராமல் நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம். இங்கு எங்குமில்லாப் புதியபணிவிடை யென்று அவர்கள் விடை கூறினர்.

அரசனுக்கும் உதவிபுரிந்ததாயிருத்தல் வேண்டும். உண்மையும் வெளியாதல் வேண்டும். என்றெண்ணிய அமைச்சர் நீரில்லாக் காடொன்றை நிருமித்தார். அது மரங்கள் செறிந்திருந்தது. பூவும் பழமும் கிழங்கும் பொங்கிப் பெருகியது. அமைச்சர் அரசனிடம் வந்தார். நீர் தவிர மற்றைய வனங்கள் யாவும் செறிந்த காடொன்றருகில் இருக்கின்றது. நீங்கள் உங்கள் காதலியுடன் அங்கு செல்வது நல்லது என்று கூறினார்.

அமைச்சர் கூறிய வண்ணமே அரசன் செய்தான். தன் காதலியுடன் ஒரு நாள் அவ்வழகிய அடவியில் அளவு கடந்துலாவினான். பசியும் வேட்கையும் அவனை வாட்டின. தண்ணீரைத் தேடித்திரிந்தான். குருக்கத்திக் கொடி வீடொன்றைக் கண்டான். தன் காதலியுடன் அதற்குள் நுழைந்தான். அங்கு அழகியதோர் கிணறு இருந்தது. அது அழகாய்க் கட்டப்பட்டிருந்ததுடன் தெளிந்த நீர் நிறைந்துமிருந்தது. அதன் கரையில் அவளுடன் சற்று உட்கார்ந்தான். சிறிது ஆலோசித்தான். நீரை அவளுக்குக் காண்பித்தல் தவறு என்பதறிந்திருந்தான். இதோ நீர் இருக்கின்றது. இந்நீரைப்பார் என்று குறித்துக் காண்பித்தல் தவறே தவிர வேறு வகையில் நீரைக் காண்பிப்பதும் காண்பதுவும் தவறில்லையென்று முடிவு செய்து கொண்டான். அவளும் தண்ணீர் பருக வேண்டும். தண்ணீரில் ஆழமுழுகியிளைப்பாறல் வேண்டும் என்று எண்ணினாள். அச்சமின்றிக், கிணற்று நீரில் இறங்குதி யென்று  தன் காதலியிடம் கூறினான். அவளும் இறங்கினாள். தண்ணீரில் முழுகினாள். ஆனால் வெளிக்கிளம்பவில்லை. அரசன் அவளைத் தேடினான். காணவில்லை. வேலையாட்களை வரவழைத்தான் கிணற்றுத் தண்ணீரை வற்ற இறைத்தான். காதலியைக் காணவில்லை. உள்ளே ஒரு வளையின் வாயிலில் ஓர் பெரிய தவளையைக் கண்டான். அது தன் காதலியைத் தின்றிருக்க வேண்டுமென்று நினைத்துவிட்டான். தண்ணீர் இறைக்கும் பொழுது எத்தனையோ தவளைகள் வெளியே வந்து விழுந்தன. அவைகளும் ஒருக்கால் சேர்ந்தோ தனித்தோ தின்றிருக்கலாம் என்று நினைத்தான். தவளையினத்தின் மேலலேயே பெரும் சீற்றம் கொண்டான். உலகமெங்குமுள்ள தவளைகள் அனைத்தையும் கொன்றுவிடும்படிக் கட்டளையிட்டான். யாதானுமொரு பயனை விரும்பித் தன்னைப் பார்க்க வருபவர் தவளைகளைத் தனக்குக் காணிக்கையாகச் செலுத்தினால் தவறாது பயன் பெறலாமென்று பறையறிவித்தான்.

எத்திசைகளிலும் எங்கும் உள்ள தவளைகள் அனைத்தும் அழிக்கப்படலாயின. பயங்கரமான அவ்வழிவைக் கண்டு தவளைகள் அஞ்சின. அவைகள் தங்கள் அரசனிடம் இதையறிவித்து முறையிட்டன. தவளையரசன் தாபத வேடம் பூண்டு அயோத்தி மன்னனையணுகிக் கூறினான்.

தவளையரசன்: அரசே, சீற்றத்திற்கிறையாகாதே, தவளைகளிடத்தில் அருள்புரி, குற்றமற்ற தவளைக் குலத்தையழிப்பது தகுதியன்று.

சீற்றம் தவிர்த்திடுவாய், தவளையழி வோய்ந்திடுவாய்
பார்க்கும் சனத்தெதிரில் தவளைகள் மாய்கின்ற
சீற்ற மடங்காதே தவளைக் கொலையதனால்
சாற்றா யறந்திறம்பாய் செயல் என் கொல் ஆம் கொலையால்.

தன் காதற்கிழத்தியின் பிரிவால் உள்ளமழலும் அரசன் அவ்வாறு கூறிய தாபனைப் பார்த்துச் சென்னான்.

அரசன்: நான் இதைப் பொறுக்கமாட்டேன். இத்தவளைகளை நான் கொன்றே தீருவேன். இப்பொல்லாத் தவளைகள் என் ஆசைக்காதலியைக் கொன்று தின்று விட்டன. எவ்வகையிலும் நான் தவளைகளைக் கொன்றே தீர வேண்டும். அறிஞனே! நீ என்னைத் தடுப்பது தகாது.

தவளை: அரசே! அருளுதி, என் உள்ளம் உளைகின்றது. நான் தவளைக்கரசன். ஆயு வென்று எனக்குப் பெயர். நீ கூறும் அப்பெண் என் மகள். அவள் பெயர் ஸுசோபனை. இஃதனைத்தும் அவளுடைய தீய நடத்தையாலாயது. பல மன்னர்களை அவள் இவ்வாறு ஏமாற்றியிருக்கிறாள்.

அரசன்: அதைப் பற்றி யெனக்குக் கவலையில்லை. அவள் உன் மகளா? அவளை நான் அடைய விரும்புகிறேன். இவளைக் கொண்டு வந்து கொடு.

தவளைக்கரசன் உடனே தன் பெண்ணை அழைத்து வந்து அரசனிடம் கொடுத்தான். இவ்வரசனுக்கு நீ பணிவிடை செய் என்று அறிவுறுத்தினான். தன் பெண் பல மன்னர்களை மயக்கி வஞ்சித்தாள். தவளைகளின் அழிவுக்குக் காரணமானாள் என்று கோபங்கொண்டான். நீ பல மன்னர்களைப் பொய் பேசி வஞ்சித்தாய். உன் குழந்தைகள் பார்ப்பணர்களுக்குக் கேடு விளைத்துக் கெடட்டும் என்று தன் பெண்ணைச் சபித்தான்.

அவ்வழகியை மறுபடியும் பெற்று இன்பவாழ்வு வாழ விரும்பிய அம்மன்னன் அவளைப் பெற்றான். மூவுலகாட்சி பெற்றவன் போல் மனமுவந்தான். தவளையரசனை வணங்கினான். தங்கள் அருள் பெற்றேன் என்று தழுதழுத்த குரலுடன் தவளையரசனிடம் கூறினான். தவளைத் தலைவனும் மருமகனிடம் விடை பெற்றுச் சென்றான்.

ஸுசோபனையும் பரீக்ஷித்தும் வெகுகாலம் அரசாண்டனர். சலன், தலன், பலன் என்று மூன்று குமாரர்கள் அவர்களுக்குப் பிறந்தனர். உரிய பருவத்தில் மூத்த மகனிடத்தில் அரசு பொறையையிறக்கி அவர்களிருவரும் காடு சென்று கடுந்தவமியற்றினர்.

சலன் அரசு செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் வேட்டையாடச் சென்றான். அழகிய மானொன்றை அப்படியே பிடிக்க வெண்ணித்தேரோடு பின் தொடர்ந்தான். இயலவில்லை. விரைந்து தேரைச் செலுத்துயென்று பாகனிடம் கூறினான்.

பாகன்: அரசே, பின் தொடர வேண்டாம். தங்கள் தேரில் வாமியினக் குதிரைகள் கட்டப்பட்டு இருப்பினும் தாங்கள் இம்மானைப் பற்ற வியலாது.

அரசன்: பாகனே, வாமியினக் குதிரைகள் எங்குள்ளன? கூறுவாய்.

பாகன்: (கூறாதிருப்பின் அரசன் சீறும். கூறின் வாம தேவ முனியின் வசைக்கிலக்காம் என்று அஞ்சினனேனும்) அரசே! மனதெனக்கடிது செல்லவல்ல வாமியினக் குதிரைகள் வாமதேவமுனிவரிடம் உள்ளன.

அரசன்: அங்ஙமாயின் தேரை வாமதேவருடைய ஆச்சிரமத்தை நோக்கிச் செலுத்து.
(தேர் வாமதேவாச்சிரமம் சென்றது. அரசன் முனிவரை நோக்கி.)

பெரியோரே! அடியேன் ஒரு மானைப் பிடிக்க வெண்ணியடித்தேன். அது ஓடி விட்டது. பிடிக்க முயன்றேன். என் குதிரைகள் விரைந்து ஓடாமையால் இயலவில்லை. தங்களிடமுள்ள வாமியினக் குதிரைகளைக் கொடுத்து உதவுங்கள்.

வாமதேவர்: கொடுக்கின்றேன். செயல் நிறைவேறியவுடனே நீ அவைகளைத் திருப்பித் தந்துவிட வேண்டும்.

அரசன் அக்குதிரைகளைப் பெற்றுக் கொண்டான். முனிவரிடம் விடை பெற்றான். தன் தேர்க்குதிரைகளை அவிழ்த்து விட்டு முனிவர் குதிரைகளைப் பூட்டச் செய்தான். தேர் வேகமாக மானை நோக்கி ஓடியது. அப்பொழுது குதிரைகளின் வேகத்தைக் கண்ணுற்ற மன்னன் பாகனை விளித்து இக்குதிரைகள் நம்மிடம் இருக்கத்தக்கவை. அப்பார்ப்பனரிடம் நாம் இவைகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம். என்று கூறினான். பிறகு மானைப் பிடித்தான். நேரே தன் தலைநகரை அடைந்தான். உவளகத்தில் அவ்வாமியினக் குதிரைகளைக் கட்டி வளர்த்தான். முனிவரைப் பார்க்கவுமில்லை. முனிவரோவெனின் காளைப்பருவமுள்ள மன்னன் சொன்ன வண்ணம் குதிரைகளைத் திருப்பிக் கொடுக்காமல் தலைநகருக்குச் சென்று களித்திருப்பதை எண்ணி ஐயோ கஷ்டம் என நினைத்தார். என்ன செய்யலாம் என்று ஒரு திங்கள் ஆலோசித்தார். தன் மாணாக்கனையழைத்தார். ஆத்ரேய! அரசனிடம் செல் காரியம் நிறைவேறியிருப்பின் குதிரைகளைத் திரும்பவும் தந்துவிட வேண்டுமென்று ஆசிரியர் கூறினர். என்று கூறு என்று கூறியனுப்பினார். மாணாக்கன் மன்னனையடைந்து முனிவர் கூறியதைக் கூறினான். இக்குதிரைகள் அரசர்க்கே உரியன. பார்ப்பனர் இத்தகைய உயரினக் குதிரைகளைப் பெறவுரியரல்லர். குதிரைகளால் பார்ப்பனர்க்காக வேண்டிய தொன்றுமில்லை. நல்லது, திரும்பிச் செல் என்று கூறி மாணவனை மன்னன் அனுப்பிவிட்டான். மாணவனும் முனிவரிடம் மன்னன் கூற்றைக் கூறி விட்டான். துன்புறுத்தும் அச்சொல்லைச் செவியுற்ற முனிவர் சினந்தார். தாமே தம் மாணவர்களுடன் நேரில் சென்றார். உற்றார் உறவினருடன் ஆஸனத்தில் அமர்ந்திருந்த அரசனைக் கண்டார். குதிரைகளைக் கொடு என்று கேட்டார். அரசன் கொடுக்கவில்லை.

வாமதேவர்: அரசனே, வருணதேவன் அந்தணர்களுக்கும் அரசர்களுக்கும் இடையில் அவர்களுடைய உறவு முறையையொழுங்காகக் காத்து வருகிறான். அதை மீறாதே, அத்தேவன் தன்னுடைய பயங்கரப் பாசங்களால் கட்டி வருத்தும் நிலையை உண்டு பண்ணிக் கொள்ளாதே. என்னுடைய வாமியினக் குதிரைகளைக் கொடுத்துவிடு. பிற புரவிகள் செய்ய முடியாத செயலை அவையுனக்குச் செய்தன. அதோடு திருப்தியடை.

அரசன்: நல்ல அடக்கமுள்ள எருதுகள் கொடுக்கின்றேன். அவையே அந்தணர்க்கேற்ற ஊர்திகள். முனிவரே, அவைகளின் உதவியால் நீவிர் வேண்டிய விடம் செல்லலாம். மறைகளே உம் போன்றவர்களைச் சுமந்து செல்கின்றன. அவைகளே போதும்.

வாமதேவன்: அரசனே, மறுவுலகில் மறைகள் என் போன்றவர்களைச் சுமக்கின்றன. எனக்கும் என் போன்றவர்களுக்கும் இவ்வுலகில் இவையே ஊர்தி.

அரசன்: நான்கு கழுதைகள் அல்லது நான்கு உயர்ந்த பல்வேறு கோவேறு கழுதைகள் அல்லது வேறு நான்கு குதிரைகள் கொடுக்கின்றேன். அவைகள் உமக்கு வாஹனமாகட்டும். இவை அரசனைச் சேர்ந்தவை. உம்மைச் சேர்ந்தவையல்ல. வென்றறிதீர்.

வாமதேவர்: இது தகாது, இவையென்னுடையவையே. அரசனே, உரிமை கூறுகின்றாய். பேருருவாய்ந்த இருப்புடலமைந்த அச்சுறுத்தும் அரக்கர்கள் உன்னைக் கூரிய குலங்களால் நான்காய்ப் பிளந்தெரியட்டும்.

அரசன்: முனிவரே, உள்ளமுரை செயல்களால் நீவிர் என்னைக் கொல்ல நினைக்கின்றீர். இஃதறிந்து அவ்வரக்கர் உம்மையும் உம்மாணவர் குழாத்தையும் வீழ்த்தட்டும். நான் அவர்களுக்கு இவ்வாறு ஆணையிடுகின்றேன்.

வாமதேவர்: அந்தரணர்களுக்குத் தண்டனை செய்வதென்று உள்ளத்தால் உள்ளுவதும் வாயால் கூறுவதும் செய்கையில் காண்பிப்பதும் இல்லை. இஃதறிந்து அந்தணர் குலத்தைப் போற்றி வாழுமறிஞன் உயர்ந்த வனாகின்றான்.

வாமதேவர் இவ்வாறு கூறியதும், பயங்கர உருவமமைந்த அரக்கர் பலர் கிளம்பி அரசனைச் சூலங்களால் குத்திக் கொன்றனர். சாகும் தருவாயில் சலன், வாமதேவரே! என் அருகுள்ள என் குலத்தவரும் பிறபணியாளரும் வணிகர் முதலியோரும் என்னைவிட்டு விலகுவதாயினும் யான் இவ்வாமியினக் குதிரைகளை விடப் போவதில்லை. அறவோர் இத்தகையர் அல்லர் என்று கூறினான். அரக்கர் அவனைக் கொன்று அவனியில் வீழ்த்தினர். வாமதேவர் திரும்பிச் சென்று விட்டார். அரசகுலத்தினர். தலனை அரசனாக்கினர். வாமதேவர் தலனிடத்தும் வந்தார்.

அரசே, அந்தணர்களுக்கு ஈதல் வேண்டும். இவ்வாறு அறநூல்கள் அறிவிக்கின்றன. அறம் திறம்புதல் அஞ்சினையாயின் என் வாமியினக் குதிரைகளைக் கொடுத்து விடு என்று கூறினார். கோபம் கொண்ட மன்னன் பாகனையழைத்து என்னுடைய இவ்வம்பை விஷம்பூசிக் கொண்டு வா, நான் இவ்வந்தணனை அடித்து வீழ்த்துகிறேன், நாய்கள் இவனுடலைப் பிடுங்கித்தின்னட்டும் என்றான். அரசே உனக்கு உன் மனைவியின் கண் பிறந்து வளர்ந்து பத்து ஆண்டுகள் நிறைந்துள்ள ஸேனஜிதனை இப்பயங்கர அம்பினால் நீ கொல்லக்கடவாய். அவ்வாறு நான் உன்னை ஏவிவிடுகிறேன் என்று வாமதேவர் கூறினார். உடனே அரசன் கையிலிருந்த அம்பு புறப்பட்டு விட்டது. அந்தப்புரத்திலிருந்த அரசகுமாரன் அடிபட்டு விழுந்திறந்தான். அரசன் இதை அறிந்தான். சினந்தான். அருகிலுள்ள தன் குலத்தவரை நோக்கி, உங்களுக்கு இன்பம் தரும் செயலை நான் இப்பொழுது செய்கிறேன். விஷம் தடவிய வேறொரு அம்பைக் கொண்டு வாருங்கள். இவ்வந்தணனை ஒழித்து விடுகிறேன். என் திறலையறியுங்கள் என்றான். அரசே, நீ இவ்வம்பை நாண் கயிற்றில் தொடுக்க வல்லனுமல்லன். எய்த வல்லனுமல்லன் என்று வாமதேவர் கூறினார்.

அரசன்: இக்ஷ்வாகு குலத்தவர்களே, பாருங்கள். என் உறுப்புகள் அசைவற்றுப் போயின. என்னால் அம்பை விட முடியவில்லை. நான் இவ்வந்தணனைக் கொல்லவல்லனல்லன். இவ்வந்தணன் பிழைத்துப் போகட்டும்.

வாசுதேவன்: அரசே! இவ்வம்பினால் உன் மனைவியைக் கொல் பாபத்திலிருந்து விடுபடுவாய்.

அரசன் உறுப்புகள் பிடிப்பிலிருந்து விடுபட்டு விட்டன. வாமதேவர் கூறியவாறே செய்யத் தொடங்கி விட்டான். அரசனுடைய மனைவி அந்தணரை வணங்கினாள். நான் மனவுறுதியுடன் இக்கொடிய என் கணவனை ஒவ்வொரு நாளும் அடைந்து அந்தணர்களைப் பற்றிய நன்மொழிகள் கூறியதுண்மையாயின் அடிபட்டிறந்தாலும் நல்லுலகம் பெறக்கடவேன் என்று வேண்டினாள். வாமதேவர் இரங்கினார். நீ அரச குலத்தைக் காப்பாற்றினாய். உயர்ந்த வரத்தைக் கேள். உன் இனத்தையும் இவ்வரசையும் ஆளு என்றருளினார். என் கணவன் பாபத்திலிருந்து விடுபடட்டும். குமரனும் பிழைக்கட்டும் என்று இராணி வேண்டினாள். அவ்வாறேயாகுகவென்று அந்தணர் கூறினார். அரசன் வாமியினக் குதிரைகளைக் கொடுத்து வணங்கி வாமதேவரையனுப்பி இனிது வாழ்ந்தான்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar