|
வீட்டுக்கு வந்த தந்தை பொருட்கள் அங்குமிங்கும் வாரி இறைந்து கிடப்பது கண்டு அம்மாவிடம் சத்தம் போட்டார். இதுதான் வீடு வச்சிருக்கிற அழகா! வீட்டை சுத்தமா வச்சாதானே லட்சுமி தங்குவா! வீட்டிலே எத்தனை பேர் இருக்கீங்க! எங்க உன் புத்திர சிகாமணி. அவன்கிட்டே சொன்னா கூட ஒழுங்குபடுத்த மாட்டானா!’’ என்று கத்தி தீர்த்தார். சற்று நேரத்தில் மகன் வந்தான். அப்பாவின் கோபத்திற்கான காரணத்தை அறிந்தான். வேகமாக வேலை நடந்தது. பழைய பொருட்களை எல்லாம் ஓரம் கட்டினான். புதுசை ஒழுங்காக அடுக்கினான். வீடு சுத்தமானது. பழைய பேப்பர்களுடன் ஒரு பகவத்கீதை புத்தகமும் இருந்தது. அதை தந்தை பார்த்து விட்டார். ஏன்டா...முட்டாள்...நாம் உயிராய் மதிக்கிறது இந்த புத்தகம். இதைப் போய் பழைய பேப்பரோட சேத்துட்டியே!’’ என்று கத்தினார். அப்பா...நீங்க சொல்றது சரி தான். இதை நீங்களோ, அம்மாவோ, வீட்டிலே இருக்கிற மத்தவங்களோ ஒருநாளாச்சும் புரட்டி பார்த்ததுண்டா...படிக்காத புத்தகம் பழைய புத்தகக்கடைக்கு தானே லாயக்கு...’’ என்றதும் பகீரென்றது தந்தைக்கு. மகனின் சொல்லில் இருந்த உண்மையை உணர்ந்தார். அன்று முதல் தினமும் ஆளுக்கொரு ஸ்லோகம் படித்து விளக்கம் அறிந்து கொண்டனர். |
|
|
|