|
வேலை தேடி அலுத்துப் போன இளைஞன் ஒருவன் சிவன் கோவிலுக்கு வந்தான். அர்ச்சகர் அவனிடம், “தம்பி... நீ மணியக்காரர் மகன் முருகன் தானே!” என்றார் தயக்கத்துடன். “ஆம்..” என்று தலை அசைத்தவனிடம், “என்னப்பா... கோவில் பக்கமே வருவதில்லையே, வேலை தேடி அலைஞ்சியே! கெடச்சுதா!” என்று கேட்டார். “கடவுளை நம்பினால் வேலையா கிடைக்கப் போகுது. வேலையை விடுங்க! ஒருவேளை சோறாவது கிடைக்குமா?” என்றான் விரக்தியுடன். “ கிடைக்குமாவா... எல்லா உயிர்களுக்கும் படியளப்பவரே இந்த சிவன் தானே. நம்பிக்கையுடன் அவர் நாமத்தைச் சொன்னால் சோறும் கிடைக்கும், வேலையும் உன்னைத் தேடி வரும்,” என்றார் அர்ச்சகர். அவரது பேச்சு முருகனை யோசிக்க வைத்தது. சோதித்துப் பார்க்க முடிவு செய்தான். மறுநாள் காலை அருகிலுள்ள காட்டுக்குச் சென்றான். ஒரு மரத்தின் மீது அமர்ந்து கொண்டான். சிவசிவ’ என்று சிவநாமத்தை மனதிற்குள் ஜபித்தான். அப்போது வழிப்போக்கன் ஒருவன் அந்த மரத்தின் கீழ் வந்து உட்கார்ந்தான். அவனிடம் இரண்டு கட்டு சாத பொட்டலங்கள் இருந்தன. அதில் ஒன்றை சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் தூங்கினான். கண் விழித்தவன் பொழுது சாய்ந்து விட்டதைக் கண்டான். மற்றொரு பொட்டலத்தை எடுக்க மறந்தவனாக போய்விட்டான். அப்போது ஒரு திருடர் கும்பல், கொள்ளையடித்த பணத்துடன் அங்கு வந்தது. அதில் ஒருவன் கட்டுசாதப் பொட்டலத்தைக் கண்டான்.
பொட்டலத்தை எடுக்க முயன்ற போது கும்பலின் தலைவன், “இந்த உணவை எடுக்காதே! எப்போதும் விழிப்புடன் இருப்பது நம் தொழிலுக்கு அவசியம். யாராவது நம்மைக் கொல்லும் நோக்கத்தில் விஷ உணவை வைத்திருக்கலாம் இல்லையா!” என்று சொல்லித் தடுத்தான். அத்துடன் யாராவது உணவை வைத்து விட்டு மறைந்திருக்கிறார்களா என்ற எண்ணத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான். மரத்தின் மீதிருந்த முருகன் கண்ணில் தென்பட்டான். “விஷ உணவையும் வைத்து விட்டு ஒன்றும் அறியாதவன் போல இருக்கிறாயா, இறங்கு கீழே” என்றான் ஆத்திரத்துடன். முருகன் பயத்தில் நடுங்கியபடியே இறங்கினான். திருடர் தலைவன், “இந்த விஷ உணவை வைத்த நீ தான் சாப்பிட்டாக வேண்டும். இல்லாவிட்டால் இப்போதே கொன்று விடுவேன்,” என்று மிரட்டினான். முருகன் அதைச் சாப்பிட்டான். சாப்பாடு ருசியாக இருந்தது. அவனுக்கு ஏதும் நேரவும் இல்லை. இளைஞன் நல்லவன் என்பதை உணர்ந்த திருடர் தலைவன் இரக்கம் கொண்டான். தன்னிடம் இருந்த பணத்தில் ஒருபகுதியைக் கொடுத்து அனுப்பி வைத்தான். அர்ச்சகரின் வாக்கு பலித்ததை எண்ணி ஆனந்தக்கண்ணீர் சிந்திய முருகன், பரமசிவம் படியளந்து விட்டார்’ என்று மெய்சிலிர்த்தான். அவனுக்கு கிடைத்த பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்து, திருடர்கள் தந்த விபரத்தைக் கூறினான். ஊர் மக்கள் அவனது நேர்மையைப் பாராட்டினர். ஒரு தொழிலதிபர் இதுபற்றி கேள்விப்பட்டு அவனுக்கு சிறந்த வேலை கொடுத்தார். சிவனருளை எண்ணி வியந்த முருகன் அர்ச்சகருக்கு நன்றி தெரிவித்து கை நிறைய தட்சணையும் கொடுத்தான். |
|
|
|