|
கீதை வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார் ஒரு குரு. சீடன் ஒருவனுக்கு சந்தேகம் வந்தது. கடமையைச் செய்... பலனை எதிர்பாராதே! என்கிறாரே கிருஷ்ண பரமாத்மா, அது எப்படி முடியும்? கடமையை மட்டும் செய்தால் பலன் எப்படிக் கிடைக்கும்? குருவிடம் கேட்டான். அவனுக்கு பதில் சொல்லாத குரு, அன்று மாலை எல்லா சீடர்களையும் ஒரு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். சந்தேகம் கேட்ட சீடனிடம் ஒரு செடியின் விதையைத் தந்து, ஓரிடத்தில் நடச் சொன்னார். அதற்குக் கொஞ்சம் தள்ளி இன்னொரு விதையை அவரே நட்டு வைத்தார். நீ நட்ட விதையை ஒவ்வொரு நாளும் தோண்டி எடுத்து, எந்த அளவுக்கு முளைத்திருக்கிறது என்று பார்த்து விட்டு, பிறகு நட்டு அதற்கு நீர் தெளி, உரம் இடு! என்று சீடனிடம் சொன்னார்.
தான் நட்ட விதைக்கு தண்ணீர் ஊற்றி, உரம் இடுவதை தினமும் குருவே செய்தார். ஒரு மாதம் கழிந்தது. சீடன் நட்ட விதை அப்படியே இருந்தது. குரு விதைத்தது, அழகிய செடியாக வளர்ந்திருந்தது. அடுத்த சில நாட்களில் குருவின் செடியில் அழகாக ஒரு பூ மலர்ந்து சிரித்தது. சீடன் நட்ட விதை இப்போதும் அப்படியே இருந்தது. குரு இப்போது சொன்னார். பலனை எதிர்பார்த்துக் கொண்டே கடமையைச் செய்வதென்பது, விதையை நட்டுவிட்டு தினம் தினம் தோண்டிப்பார்ப்பது போன்றது. அதனால் நன்மை எதுவும் கிடைக்காது. பலனை எதிர்பாராமல் செய்யும் போதுதான் அது வளர்ந்து, செழித்து தானாகவே மலர்ந்து பலனைத் தரும். இதைத்தான் பகவான் கிருஷ்ணர் சொல்லியிருக்கிறார்! சீடர்கள் புரிந்து கொண்டார்கள்.
|
|
|
|