|
குறும்புக்கார ஆசாமி ஒருவன், மகான் ஒருவரிடம் சென்று கேட்டான்; நான் திராட்சை சாப்பிடலாமா? மகான் சொன்னார்: ஓ ...... தாராளமா! அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா? ஓ..... பயன்படுத்தலாமே! புளிப்புச் சுவைக்காக கொஞ்சம் வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா? அதிலென்ன சந்தேகம்? அப்படீன்னா, இவையெல்லாம் சேர்ந்ததுதான் மது, அதைக் குடிப்பது மட்டும் தப்பு என்று சொல்கிறார்களே? மகான் யோசித்தார். குறும்புக்கார ஆசாமியிடம் கேட்டார்; இங்க பாருப்பா.... உன் தலை மேலே கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா உனக்குக் காயம் ஏற்படுமா? அதெப்படி ஏற்படும்? தண்ணீர் ஊற்றினால்? தண்ணீர் ஊற்றினால் எப்படிக் காயம் ஏற்படும்? மண்ணையும் தண்ணீரையும் கலந்து சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால்? காயம் ஏற்படும்! நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்! என்றார், மகான். விதண்டாவாதங்களை விட்டொழித்துவிட்டு, பகவானின் பாதங்களில் மனதை வைத்து வாழ்க்கை நடத்தினால், எத்தனை இனிமையாக இருக்கும்? எத்தனை சிறப்பாக இருக்கும்? அதுதானே வாழ்க்கை? வாருங்கள் வாழ்ந்து பார்ப்போம்.... கடவுளின் பாதங்களைப் பற்றியபடியே! |
|
|
|