|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » வேங்கடவனின் கருணை |
|
பக்தி கதைகள்
|
|
த்வாபர யுகத்தில் குண்டனி தேசத்தின் அரசனான பீஷ்மக மஹாராஜனின் மகளாக அன்னை மஹாலக்ஷ்மியே தவப்புதல்வியாகப் பிறந்தாள். மகளின் வித்யாசமான நடத்தை. குணம், இச்சை இவை அனைத்தையும் பீஷ்மக ராஜன் நன்கு அறிந்திருந்தான். மகளின் இச்சையான க்ருஷ்ணரின் மனைவியாக வேண்டும் என்பதையும் நன்கு புரிந்திருந்து - மகளை கொடுத்து ஸ்ரீக்ருஷ்ணரை மாப்பிள்ளை ஆக்கிகொள்ளத் தவறி விட்டான். உள்ளத்தின் ஒரு மூலையில் அந்த எண்ணம் கொண்டிருந்தான். ஆனால் அதர்ம கூட்டத்தில் சிக்கியிருந்த மகன் ருக்மியை எதிர்த்து இந்த நல்ல காரியத்தை துணிச்சலாக நடத்த தவறி விட்டான்.
ஸ்ரீக்ருஷ்ணர் அறியாததா பீஷ்மகன் நல்ல உள்ளம் படைத்தவன் பக்தன். சாஸ்த்திர சம்பன்னன் என்று. ஆனால் அவன் செய்ய வேண்டிய நல்ல மங்கள காரியத்தை செய்யாமல் தவிர்த்ததற்கு தண்டனை கொடுக்க வேண்டும். தண்டித்து நற்கதி கொடுத்து அவன் செய்யத்தவறிய அதே காரியத்தை அவன் மூலமே செய்விக்க வேண்டும் என பகவான் இச்சை கொண்டு மிக அழகாக நடத்தி முடித்தார்.
அந்த பீஷ்மகனை கலியுகத்தில் பிறக்கச் செய்தார். காளஹஸ்தியில் ஓர் வயோதிக தம்பதிகள் வசித்து வந்தனர். நல்ல ஞானியும் அதே சமயம் திருமலை வேங்கடவனின் பரமபக்தர். அவர்களுக்கு குழந்தை பாக்யம் இல்லாதிருந்தும் இறைவனிடம் யாசிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து பக்தியுடன் பகவானை தொழுது வந்தனர். ஆனால் அந்த வயோதிகத்தில் ஸ்ரீஹரி அவர்களுக்கு ஓர் ஆண் சந்ததி அருளினார். வைதிகத்திலும் சாஸ்திரத்திலும் கரை கண்ட அவர் தன் ஒரே புதல்வனுக்கு எல்லா விஷயங்களையும் கரைத்து புகட்டியது. போல் சொல்லிக் கொடுத்தார். அவனும் அனைத்திலும் தேர்ந்து விளங்கினான். அந்த மைந்தனுக்கு மாதவன் என்றே திருநாமம் வைத்திருந்தார். அவனுக்கு சந்திரலேகை எனும் நல்ல குணம் நிறைந்த அழகான பெண்ணை மணம் செய்வித்தார். அவளும் இவர்களின் குடும்பத்திற்கு தக்கவளாக மிக நன்றாக நடந்து கொண்டாள்.
ஒருநாள் மாதவன் அந்தி மயங்கும் வேளையில் மனைவியின் அருகாமையை இச்சை கொண்டான். ஆனால் அவள் அது சாஸ்திர விரோதமானது என வாதிட்டு சம்மதிக்காமல் தவிர்த்து விட்டாள். அவன் மட்டும் ஹோமத்திற்கு வேண்டிய சமித்து எடுத்து வர தனியே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு சண்டாள குடும்பத்தினர் குடித்து கும்மாளமிட்டபடி இருந்தனர். மாதவன் அவர்களைச் சற்று நேரம் நின்று பார்த்தான். அந்தச் சண்டாள குடும்பத்தவரின் பெண்ணும் அங்கே இருந்தாள். அவளைப் பார்த்ததும் அவளிடம் இச்சை கொண்டான். ஆனால் அவளோ எவ்வளவு உயர்ந்தவள் புத்திசாலி என்பதை உரையாடல் மூலமே அறிந்து கொள்ளலாம். அவளது பெயர் குந்தலா பார்க்கவும் மிக அழகாகத் தெரிந்தாள்.
அவள், ஐயா நீங்கள் ப்ராம்மணர். இந்த வேளையில் இந்த இடத்துக்கெல்லாம் வரக்கூடாது. எங்களிடம் பேச்சுவார்த்தை கொள்வதோ, அருகில் வருவதும் சரியல்ல, எங்களுடைய உணவானது தாங்கள் வாயில் பெயரைச் சொல்லவே தயங்கும் அசைவ உணவுதான். எங்களுக்கு இரவுபகல் எல்லாம் ஒன்றே. மனதுக்கு வரும் இச்சைக்கேற்ப செயல்படுவோம். தெய்வம், சக்தி, சாஸ்திரம் என்ற இவை எதற்கும் கட்டுபடாதவர்கள் தயவு செய்து உங்கள் இருப்பிடத்திற்குச் சென்று சந்தோஷமாக வாழுங்கள் என்றாள்.
ஏ குந்தலா நீ இல்லாமல் நான் ஒரு கணம் கூட வாழ முடியாது என மிகவும் பிடிவாதம் பிடித்தான். உடனே அவள் ஊம்! அப்படியானால் சரி முதலில் நீ அணிந்துள்ள பவித்திரமான பூணூலை களைந்து விடு. அதன்பின் சிகை வைத்துள்ள உன் தலையை சுத்தமாக மழித்து விடு. பிராம்மணர்கள் உடுத்தும் விதமாக நீ உடுத்தியுள்ள வேஷ்டியை விடுத்து எங்கள் ஆண்கள் போல அழுக்குத் துணியை கட்டிக் கொள் என உத்திரவிட்டாள். அவனும் அதே போல் செய்தான். ஆனால் அந்தப் பெண் குந்தலா - ஹேபகவானே என்னை ஏன் இவ்விதம் பாபம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டாய் எனப் புலம்பினாள். அந்தக் குந்தலையுடன் 6 ஆண்டுகள் சுகமாக இருந்தான். ஒரு நாள் அவள் இறந்து போனாள்.
ஊண் இன்றி உறக்கமின்றி தன் கால் போன போக்கில் நடந்து திருப்பதி மலையடிவாரம் மாதவன் வந்து சேர்ந்தான். அங்கு ஓர் அரசன் தன் படையுடன் வேதவிற்பன்னர்களுடன் மலையேற வந்திருந்தான். அந்த ப்ராம்மணர்கள் உண்டு மிகுந்த உணவை மாதவனும் உண்டான். மறுநாள் அவர்கள் அனைவரும் திதி செய்தார்கள். நல்ல பரிசுத்தமான ஆகாரத்தை உண்டதால் இவனுக்கு தன் பழைய கால நினைவு உண்டானது. தானும் தன் முன்னோருக்கு திதி செய்தான். ஆனால் பிண்டம் வைக்க அன்னமின்றி மண்ணை உருட்டி வைத்தான். அதிலேயே பித்ருக்கள் திருப்திபட்டு ஆசி கூறினர். மாதவனும் அரச பரிவாரத்துடன் மலை ஏறத் துவங்கினான். மலை ஏற ஏற வயிற்றில் ஏதோ ஒரு வலி உண்டானது. சற்று நேரத்தில் அவன் வாந்தி எடுத்தான். 12 ஆண்டு காலமாக அவன் உண்ட கெட்ட ஆகாரம் தங்கி அவனை தகாத வாழ்க்கை நடத்த தூண்டியதோ! அந்த தீய உணவு அனைத்தும் பாவமாக வாந்தி வடிவத்தில் வெளி வந்தது. இப்போது முற்றிலும் பரிசுத்தமாகியிருந்தான். அப்போது அசரீரி மூலமாக ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி இந்த தேகத்தை விடு. நீ இப்புவியில் வாழ்ந்த வாழ்வு முடிந்தது. கலியுகத்தில் நீ ஆகாசராஜனாக பிறந்து மஹாலக்ஷ்மியே ஆன பத்மாவதிக்கு தந்தை ஆவாய். அப்போது நீ த்வாபரயுகத்தில் செய்யத்தவறிய கன்யா தானத்தை இப்போது செய்து பிராயச்சித்தம் செய்து கொள். நீ செய்த பாவங்கள் அனைத்தும் கரைந்து நீ வைகுண்ட லோகம் வந்து சேர்வாய் என அசரீரி வாணி கூறியது.
மாதவனும் அதே போல ஸ்ரீநிவாச கல்யாணத்தை சிறப்பாகச் செய்து தான் செய்யத் தவறிய கடமையையாற்றினான். இவ்விதம் வேங்கடமுடையான் தன் பக்தனுக்கு சிறு தண்டனை அளித்து பிறகு ஆட்கொண்டான் என்பது தெளிவாகிறது. |
|
|
|
|