|
தன் கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவருக்கு வெயிலால் நாக்கு வறண்டது. வழியில் ஒரு கிணற்றில் இளைஞன் ஒருவன் கிணற்றில் தண்ணீர் இறைத்து, பாத்தியிலுள்ள செடிகளுக்கு பாய்ச்சிக் கொண்டிருந்தான். முதியவர் அவனிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். தாகம் தீர்ந்த மகிழ்ச்சியில் முதியவர், “தம்பி.... எங்கும் வறட்சி நிலவுகிறதே... ஆனால் உன் தோட்டத்து கிணற்றில் மட்டும் தண்ணீர் நன்றாக ஊறுகிறது. அதிர்ஷ்டம் உன் பக்கம் இருப்பதால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது,” என்றார். “ஐயா... உழைப்பின் தன்மையை ‘அதிர்ஷ்டம்’ என்று சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள். அத்தனையும் என் உழைப்பு. அவ்வப்போது என் கிணற்றை துõர்வாரி பராமரிப்பு செய்ததால், இந்த வறட்சியிலும் என் கிணறு வற்றவில்லை... விடாமுயற்சியுடன் பாடுபட்டதால் தான், இந்த கட்டாந்தரை கூட பூஞ்சோலையாக மாறியிருக்கிறது. உழைப்பு என்னும் விலை கொடுத்தால் மட்டுமே அதிர்ஷ்டக்கதவு திறக்கும்,” என்றான். முதியவரும் இளைஞனை தட்டிக் கொடுத்துப் புறப்பட்டார். |
|
|
|