|
ஸ்ரீகிருஷ்ண சைதன்யரின் ஆசிரமத்தில் ஒருநாள் மாலை பூஜையின்போது பகவானுக்கு நைவேத்தியம் செய்ய எதுவுமே இல்லை. சீடரான கிருஷ்ணதாசர் பக்கத்து வீட்டில் இருந்த ராதாபாய் என்பவரிடம் சென்று, நைவேத்தியத்துக்குத் தேவையான அரிசி, பால், சர்க்கரை போன்றவற்றை வாங்கி வந்து நைவேத்தியம் தயாரித்தார். ஆசிரமத்தில் பண்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், கிருஷ்ணதாசர் நைவேத்தியத்துக்கு என்ன செய்தார் என்று ஸ்ரீகிருஷ்ண சைதன்யருக்குப் புரியவில்லை. எனவே, அவர் கிருஷ்ணதாசரிடம், நைவேத்தியத்துக்கு என்ன செய்தாய்? என்று கேட்டார்.
கிருஷ்ணதாசரும் நடந்ததைக் கூறினார். அதைக் கேட்ட சைதன்ய பிரபு, நீ அந்த அம்மாவிடம் வைத்த நம்பிக்கையை பகவான் கிருஷ்ணரிடம் வைக்கவில்லையே என்றார், கிருஷ்ணதாசருக்கு ஒன்றும் புரியவில்லை. பகவானிடம் நம்பிக்கை வைத்தால் அவரே கொண்டு வந்து கொடுத்துவிடுவாரா? என்ன என்பதாக அவர் நினைப்பு. அதைப் புரிந்துகொண்ட சைதன்ய பிரபு, நீ பகவான் கிருஷ்ணரிடம் நம்பிக்கை வைத்து வேண்டிக்கொண்டு இருந்தால், நீ போய் கேட்காமல், அந்த அம்மையாரே நைவேத்தியத்துக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்திருப்பார். கேட்டுக் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணிய பலனைவிடவும் கேட்காமல் கொடுப்பதால் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். நீ பகவானிடம் நம்பிக்கை வைக்காமல், அந்த அம்மையாரிடம் கேட்டுப் பெற்றதால், அந்த அம்மையாருக்குக் கிடைக்கவேண்டிய புண்ணிய பலன் குறைந்துவிட்டது என்றார். |
|
|
|