|
வரருசியின் மைந்தரான உளியூர் தச்சன் ஒரு சிற்பியிடம் வளர்ந்தார். இன்று கேரள கோயில்களில் காணப்படும் அபூர்வமான சிற்பக் கலைகளுக்கும், கட்டட நேர்த்திக்கும் பெரும் காரணகர்த்தா இவர்தான். வருங்காலத்தை உணர்ந்து எச்சரிக்கும் ஆற்றலை இறைவன் இவருக்கு அளித்திருந்தான். செங்கனூர் கோயிலில் அமைத்திருந்த கூத்தம் பலம் குக்குட (குடம்) வடிவமானது. அதை உருவாக்கிய உளியூர் தச்சன், நூறு ஆண்டுகள் கழித்து இது அக்னிக்கு இரையாகிவிடும். அதை எத்தனை பேர் முயன்றாலும் மீண்டும் படைக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். அதன்படியே நடந்தது. கட்டட விற்பன்னர்கள் பலர் முயன்றும் பழைய வடிவம் அதற்கு வரவில்லை! தீப்பற்றியபோது மூல விக்கிரகம் சிதிலமாயிற்று. கோயில் நிர்வாகஸ்தர்கள் புதிய பிரதிமையை உருவாக்க ஏற்பாடு செய்தனர். உளியூர்தச்சன், செங்கனூர் பகவதியின் விக்கிரகத்தை மனிதர்களால் வடிக்க இயலாது. அடுத்த அமாவாசையன்று நதிக்கரைக்குச் செல்லுங்கள். பகல் பன்னிரண்டு மணிக்கு ஆற்றின் நடுப்பகுதிக்கு மேல் கருடன் வட்டமிட்டு, ஒரு இடத்தில் ஸ்தம்பித்து நிற்கும். அந்த இடத்துக்குக் கீழே தோண்டிப் பார்த்தால் பகவதி விக்கிரகம் கிடைக்கும். ஒரு மண்டலம் ஜல நிவாஸம் செய்து முறைப்படி பிரதிஷ்டை பண்ணுங்கள் என்றார்.
அதேபோல் அமாவாசையன்று கருடன் காட்டிய இடத்திலிருந்து எடுத்து வந்த பகவதியம்மன் விக்கிரமே இப்போது இங்கே பூஜிக்கப்படுகிறது. உளியூர் தச்சர் அமைத்த தடாகம் ஒன்று ஒரு துறையிலிருந்து பார்த்தால் வட்டமாகவும், மற்றொரு கோணத்தில் எண்கோண வடிவமாகவும், இன்னொரு கரையில் இருந்து பார்க்க, சதுரமாகவும் காட்சியளிக்கிறது. ஊரே புகழ்ந்தாலும் அவர் மகன் இது பயனற்ற பணி எனப் பெருமூச்செறிந்தான். ஏன் அப்படிச் சொல்கிறாய்? என்று தந்தை கேட்க, ஒரு மைல் தூரத்தில் ஆற்று நீர் ஓடுகிறது. பக்தர்கள் அங்கே குளிப்பார்களா, அதைவிட்டு இங்கே வருவார்களா? என்றான். அவன் சொன்னபடியே சிலநாளில், ஒரு பெருவெள்ளம் வந்து, ஆறு திசை மாறி குளத்துக்கும் கோயிலுக்கும் நடுவே ஓடியது. பெருந்தச்சர், மகனின் தீர்க்கதரிசனத்தை எண்ணி வியந்தார். ஒருநாள் கோயில் பணி செய்து கொண்டிருந்தபோது மேல் கூரையிலிருந்து ஒரு பெரிய உளி வந்து தாக்க, அற்பாயுளில் மாண்டுவிட்டான் மகன். ஆறுதல் சொல்ல வந்தவர்களிடம் கொடுத்தவனே எடுத்துக்கொண்டான் என்று தத்துவமாகச் சொன்னார் பெருந்தச்சனார். |
|
|
|