|
ஒரு காட்டில் யானை ஒன்று, மரத்தின் இலைகளைப் பறித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு வண்டு அதன் காதுப்புறமாகப் பறந்து ரீங்காரம் செய்தது. யானை அதை லட்சியம் செய்யாமல் தன் காதுகளை அசைத்தவாறு, இலைகளைச் சாப்பிடுவதில் கவனமாக இருந்தது. ஆனால், வண்டு மீண்டும் மீண்டும் சத்தமிட்டபடியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பொறுமை இழந்த யானை ஒரு கட்டத்தில் வண்டைப் பார்த்து, நீ ஏன் இப்படி அமைதியில்லாமல் சத்தமிட்டபடி பறந்துகொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. அதற்கு வண்டு, நான் இங்கே பார்க்கும் பொருளையெல்லாம் விரும்புகிறேன். பல வண்ணப் பூக்களை நுகர்கிறேன். அவற்றில் தேன் குடித்து மகிழ்கிறேன். எனவே, உற்சாக மிகுதியில் ரீங்காரம் செய்கிறேன். அது சரி, நீ எப்படி இவ்வளவு இரைச்சலுக்கிடையேயும் அமைதியாக இருக்கிறாய்? என்று கேட்டது. என்னுடைய புலன்கள் என்னை ஆட்டிப் படைக்க நான் அனுமதிப்பது இல்லை. நான் செய்கின்ற வேலையில் மட்டும் கவனமாக இருக்கிறேன். இப்போது நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த வேலையில் மட்டும் நான் கவனம் செலுத்துகிறேன். ஆதலால், அமைதியாக இருக்கிறேன் என்றது. புலன்களை அடக்கிச் செயல் புரிந்தவன், அமைதியும் நிம்மதியும் நிச்சயம் பெறுவான். |
|
|
|