|
கப்பல் ஒன்று கடலில் மூழ்கியதில் இருவர் தப்பிப் பிழைத்து, ஆளில்லா தீவு ஒன்றில் கரையேறினார்கள். உணவு, உடை, உறையுள் என்று எதுவும் இல்லை அங்கே. ஒருவன் தினமும் வெகுநேரம் கடவுளை வேண்டினான். அடுத்தவனோ சில விநாடிகள் மட்டுமே பிரார்த்தனை செய்தான். சில நாட்களில் அங்கே பழமரம் ஒன்று முளைத்தது. நீர் ஊற்று ஒன்றும் தோன்றியது. இருவரும் பசியாறினர். நீரருந்தினர். அங்கிருந்து தப்பி ஊருக்குச் செல்லவேண்டும் என மணிக்கணக்கில் வழிபட்டான் முதலாமவன். அடுத்தவனோ வழக்கம்போல சில விநாடிகள் மட்டுமே கும்பிட்டான். அடுத்த சில நாட்களில் அங்கே ஒரு கப்பல் வருவது தெரிந்தது. அதில் ஏற அவசர அவசரமாகச் சென்றான் முதலாமவன். அடுத்து இரண்டாமவனும் ஏற வரவே அவனைத் தடுத்தான்.
என் நீண்ட பிரார்த்தனைக்கு இரங்கித்தான் இறைவன் இந்த உதவிøய் செய்திருக்கிறார். எனவே நீ வராதே! என்று கோபமாகச் சொன்னான். அப்போது ஓர் அசரீரி எழுந்தது. இதுவரை நீ அனுபவித்த நன்மைகள் எல்லாம் நான் அவனுக்காகச் செய்தவையே. தினமும் நீ மணிக்கணக்கில் பிரார்த்தித்தாலும் சுயநலமாகவே வேண்டினாய். ஆனால் அவனோ, என் நண்பன் கேட்பவை அனைத்தையும் கொடுத்து அருளுங்கள் என்ற ஒற்றை வாக்கியத்தை மட்டுமே கேட்டான். தன்னலமற்ற அவனது வேண்டுதலுக்காகவே அனைத்தையும் நான் அளித்தேன்! தெய்வத்தின் குரல் சொல்ல, தலைகுனிந்தான் இரண்டாமவன். |
|
|
|