|
பூவுலகில் இருக்கின்ற பிரபலமான சிவாலயங்களுள் மிக மிகப் பழமையானது திருவண்ணாமலை. புராதனமான இந்த ஆலயம் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆகி இருக்கும் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து. திருவண்ணாமலையில் குடி கொண்டிருக்கும் அண்ணாமலையார் என்கிற அருணாசலேஸ்வரரைத் தரிசிக்க பக்தகோடிகள் நித்தமும் வந்த வண்ணம் இருக்கின்றனர். ‘அணுகுதல்’ என்றால் ‘நெருங்குதல்’ என்று பொருள். ‘அண்ணா’ என்ற சொல்லுக்கு ‘நெருங்க இயலாத’ என்று பொருள். மகாவிஷ்ணுவாலும், பிரம்மனாலும் சிவபெருமானின் அடியையும் முடியையும் நெருங்க இயலவில்லை. பிறகு அவர்களுக்கு ஜோதிப் பிழம்பாக தரிசனம் தந்தார் ஈசன். இந்த நிகழ்ச்சி நடந்தது திருக்கார்த்திகை தினத்தன்று என புராணங்கள் கூறுகின்றன. பஞ்சபூதத் திருத்தலங்களுள் அக்னி தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை. ஏனைய நான்கு திருத்தலங்கள்: காஞ்சிபுரம் (நிலம்), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (வாயு), சிதம்பரம் (ஆகாயம்). சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. ஆனால், திருவண்ணாமலையை மட்டும் இருந்த இடத்தில் இருந்து நினைத்தாலே முக்தி கிடைத்து விடும். நாம் வசிக்கின்ற இடத்தில் இருந்தவாறே ‘அருணாசலா போற்றி...
அண்ணாமலையானே போற்றி’ என்று மனமுருகி பிரார்த்தித்தாலே மோட்சம் நிச்சயம்.ஒரு முறை இந்தத் தலத்தைத் தரிசிக்கின்ற வாய்ப்பு கிடைக்கிறவர்களுக்கு அடுத்தடுத்து திருவண்ணாமலை வந்து தன்னைத் தரிசிக்கின்ற மிகப் பெரிய யோகத்தைத் தருவார் அண்ணாமலையார். இலக்கியங்களிலும், புராணங்களிலும், வரலாற்றிலும் திருவண்ணாமலையின் சிறப்பு விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சைவ நால்வர்களால் பாடல் பெற்றதும், அருணகிரிநாதர் அவதரித்து, முருகப் பெருமானால் ஆட்கொள்ளப்பட்டதும் இந்த திருத்தலத்தில் தான். 24 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் அண்ணாமலையார் ஆலயத்தில் ஒன்பது ராஜகோபுரங்கள் அமைந்துள்ளன. ஆறு பிரகாரங்கள், 22 விநாயகர் திருமேனிகள் (சிலைகள்), 142 சன்னிதிகள், 306 மண்டபங்கள் என பிரமிக்க வைக்கும் கோவில். மலையே சிவனாக இங்கு வணங்கப்படுவதால், சிவபெருமானை வணங்கும் விதமாக கிரிவலம் வருவது இங்கே சிறப்பு. புனிதம் நிரம்பிய இந்த மலையைத் தேடி வந்து தவமிருந்து, இறை இன்பம் பெற்ற மகான்கள் எண்ணற்றோர். அண்ணாமலையாரின் அருளைப் பெறவும், அற்புதமான மலையில் தவம் புரியவும் வேண்டி எண்ணற்ற மகான்கள் திருவண்ணாமலையை நோக்கித் தங்கள் பார்வையைத் திருப்பினார்கள்.
திருவண்ணாமலையோடு தொடர்புடைய மகான்கள் என்று சொல்ல ஆரம்பித்தால் அப்பய்ய தீட்சிதர், அருணகிரிநாதர், குக நமசிவாயர், குரு நமசிவாயர், ஈசான்ய தேசிகர், அம்மணி அம்மாள், விருபாட்சி முனிவர், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், விசிறி சாமியார் எனப்படும் யோகி ராம்சுரத்குமார் என்று இந்தப் பட்டியல் நீளும். இவர்களில் சில மகான்கள் திருவண்ணாமலையிலேயே திருச்சமாதி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மை எனப்படும் அபிதகுஜாம்பிகையையும், சித்தர்கள் சமாதிகளையும் வணங்கிச் செல்கிறார்கள். சகல தேவர்களும், மகரிஷிகளும், மகான்களும் நித்தமும் கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசித்துச் செல்வதாக ஐதீகம். இந்த அற்புதமான மலையில் பலன் தரும் மூலிகை மரங்களும், மகான்கள் வசித்த குகைகளும், புனிதமான தீர்த்தம் மற்றும் சுனைகளும் காணப்படுகின்றன. இந்த இயற்கையான சூழ்நிலை உடலுக்கும் உள்ளத்துக்கும் இதம் தருவதாகும். எண்ணற்ற திருவிழாக்கள் அண்ணாமலையார் ஆலயத்தில் சீரும் சிறப்புமாக நடந்து வந்தாலும், அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இருப்பது திருக்கார்த்திகை தீபத் திருவிழாதான். பத்து நாள் விழாவாக தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபத்தைத் தரிசித்தால், நமக்கு முந்தைய 21 தலைமுறையினர் முக்தி நிலையை அடைவார்கள். கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று மலை உச்சியில் மாலை ஆறு மணியளவில் ஏற்றப்படும் மகா தீபத்தைத் தரிசிக்க திரளும் கூட்டம் பல லட்சத்தைத் தாண்டும்.
அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்தி விக்ரகங்கள் பல்லக்கில் அமர்ந்தபடி ஒருவர் பின் ஒருவராக அண்ணாமலையார் சன்னிதியில் இருந்து புறப்பட்டு, கிளி கோபுரம் அருகே உள்ள மண்டபத்தை வந்தடைவார்கள். மாலை 5:55 மணியளவில் அர்த்தநாரீஸ்வரர் திருமேனி எழுந்தருளியுள்ள பல்லக்கு ஆடியபடியே கோலாகலமாகப் புறப்பட்டு வரும். அதே வேளையில் கோவில் கொடிமரம் முன்புள்ள அகண்ட தீபத்தில் தீபம் ஏற்றுவார்கள். இதை ஒரு சமிக்ஞையாகக் கொண்டு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அப்போது கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் குவிந்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ‘அண்ணாமலையாருக்கு அரோஹரா... அருணாசலேஸ்வரருக்கு அரோஹரா’ என்று கோஷம் எழுப்புவார்கள். மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டவுடன், மண்டபம் முன் எழுந்தருளி உள்ள பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கும். இரவில் பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவர். தீபத்தைத் தரிசிப்பதும், ஏற்றி வைப்பதும் அளவற்ற புண்ணியத்தைத் தரும். மகாபலி சக்கரவர்த்தியின் பூர்வ ஜென்ம கதை இதற்குப் பெரிய சான்று. இறைவன் சன்னிதியில் ஒரு சில விநாடிகளில் அணைய இருந்த தீபத்தை, விளக்கின் மேல்பாகத்தில் ஓடிக் கொண்டிருந்த ஒரு எலி, தன்னையும் அறியாமல் தீபச் சுடர் அருகே ஓடியபோது, திரியானது தற்செயலாகத் துõண்டி விடப்பட்டது. எனவே, சிறிது நேரத்தில் அணைய இருந்த ஓர் ஆலய தீபம் புத்துயிர் பெற்று மீண்டும் பிரகாசமாக சுடர் விட ஆரம்பித்தது. இப்படி யதேச்சையாகத் திரியைத் துõண்டி விட்ட இந்த எலியே, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கார்த்திகை தீபத்தன்று திருவிளக்கேற்றி பிரார்த்தித்தால், தீவினைகளில் இருந்து மீண்டு, பாவங்களில் இருந்து வெளியேறி மோட்சம் கிடைக்கும். |
|
|
|