|
கிருஷ்ணகிரியை ஒட்டிய குருகும்லாபுரத்தைச் சேர்ந்தவர் கிரிதேவர். இவர் தன் குருநாதரின் உத்தரவை ஏற்று திருவண்ணாமலையில் உள்ள மடத்தில் சிவபூஜை செய்து வந்தார். தினமும் பிரம்மதீர்த்தத்தில் நீராடி, பூஜைக்குரிய தீர்த்தத்தை மண்பாத்திரத்தில் எடுத்து வருவார். ஒருநாள் கிரிதேவர் கையில் இருந்த மண் பாத்திரம் தவறி விழுந்து உடைந்தது. மடத்தில் வேறு பாத்திரம் இல்லாததால் செய்வதறியாமல் நின்றார். அப்போது அண்ணாமலையார் அசரீரியாக ஒலித்தார். “கிரிதேவா! கவலை வேண்டாம். தீர்த்தத்தை இரு கைகளால் அள்ளிக் கொள். அதைக் கொண்டு அபி÷ ஷகம் செய். பாத்திரம் கொண்டு அபிஷேகம் செய்வது போலவே அது காட்சியளிக்கும்” என்று வழிகாட்டினார். கிரிதேவரும் அப்படியே செய்தார். அன்று முதல் ஊர்மக்கள் அவரை ‘பாணிபாத்திர சுவாமி’ என்று அழைக்கத் தொடங்கினர். ‘பாணி’ என்றால் ‘தண்ணீர்’ என்பது பொருள். ‘தண்ணீரைப் பாத்திரமாக்கியவர்’ என்ற பொருளில் இவ்வாறு பெயர் வந்தது. ஒருநாள் மடத்திற்கு பக்தர்கள் சிலர் வந்தனர். அவர்களுக்கு உணவிட மடத்தில் பணமில்லை. உடனே பாணிபாத்திர சுவாமி, அண்ணாமலையாரை வேண்டினார். அண்ணாமலையார் அவருக்கு உதவும் விதத்தில் தண்ணீர் பாத்திரத்தில் தங்கக்காசுகள் கிடைக்கச் செய்தார். அதன் மூலம் அவர்களுக்கு உணவிட்டார். கன்னட சிவாச்சார மரபைச் சேர்ந்த இவரது மடம்,‘ திருவண்ணாமலை பாணிபாத்திர தேவர் மடம்’ என்று அழைக்கப்படுகிறது. |
|
|
|