|
குரு ஒருவர் தன் முதுமைக் காலத்தில், தனக்குப் பின் ஆசிரமப் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என குழப்பம் கொண்டு, நான்கு முதன்மைச் சீடர்களை அழைத்து ஒரு போட்டி வைத்தார். அன்பை வெளிப்படுத்தும் ஓர் அழகிய பொருளை கொண்டு வாருங்கள் என அவர்களை அனுப்பினார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த ஒரு சீடனின் கைகளில் மலர் இருந்தது. அடுத்து வந்தவனின் கைகளில் வண்ணத்துப்பூச்சி, மூன்றாவதாய் வந்தவனின் கரங்களில் அழகிய பறவைக்குஞ்சு. நான்காவது சீடன் வெகுநேரம் கழித்து வெறுங்கையோடு திரும்பி வந்தான். குரு காரணம் கேட்க, நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். பட்டாம்பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய் இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். பறவைக் குஞ்சைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமே என்று விட்டுவிட்டேன் என்றான். அவனை அருகில் அழைத்த குரு அவனது கன்னத்தை வருடியவாறே, அன்பு என்றால் இதுதான்... நீயே எனக்குப்பின் இந்த ஆசிரமத்தை நிர்வகிக்கும் தகுதி பெற்றவன் எனக்கூறி அவனை ஆசிர்வதித்தார். |
|
|
|