|
சீடன் ஒருவன் இறைபக்தி மிகுந்தவன். அவன் ஒருநாள் தன் குருவிடம் கேட்டான். நான் தினமும் மரத்தடியில் அமர்ந்து பகவானைக் குறித்து தியானம் செய்கிறேன். அவர் எப்படியும் என்னைக் காப்பாற்றுவார் என்று திடமாக நம்புகிறேன். அப்படி இருக்க நான் ஏன் வேலை செய்ய வேண்டும்? என் பசி, துக்கம், நன்மைகள் எல்லாவற்றையும் பகவானே பார்த்துக்கொள்ள மாட்டாரா? பசி வந்து வந்து என் தியானத்தைக் கலைக்கிறதே? என்று கேட்டான். அதற்கு குரு ஒரு கதை சொன்னார். ஒரு காட்டில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மேல் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கும். ஒரு நாள் திடீரென்று, இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா? என்று சந்தேகம் வந்தது. நான் மிகுந்த பசியுடன் இருக்கிறேன். இன்று எனக்கு உணவு கிடைக்குமா? இறைவா, நீதான் எல்லோருக்கும் உணவளிப்பவன் ஆயிற்றே என்று கூவியது. உடனே ஆகாயத்திலிருந்து, உனக்கு இன்று உணவு உண்டு? என்று பதில் வந்தது. அதைக் கேட்ட கழுகு, இன்று இரை தேடும் வேலை எனக்கில்லை; எப்படியும் உணவு கிடைத்து விடும்! என்று பேசாமல் தியானத்தில் ஆழ்ந்தபடி பாறை மேல் அமர்ந்திருந்தது.
மதியம் ஆயிற்று, இரவும் ஆயிற்று, உணவு இல்லை. இறைவன் நம்மை ஏமாற்றிவிட்டாரே! என்று வருந்தியது. அப்பொழுது ஒரு குரல், குழந்தாய் சாப்பிட்டாயா? என்றவுடன் கழுகுக்கு அழுகை வந்துவிட்டது கண் கலங்கியது. குழந்தாய் சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு நீண்ட நேரமாக உள்ளது என்று கூற, கழுகு பின்னால் பார்த்தவுடன் அங்கே ஓர் பெரிய எலி இறந்து கிடந்தது. கழுகு சந்தோஷத்துடன் அதை உண்ணத் தொடங்கியது. பின்னர், கடவுளே! இதை ஏன் இவ்வளவு காலம் தாழ்த்தி எனக்குக் கொடுத்தாய்? என்று கேட்டது. உடனே இறைவன், குழந்தாய், உனக்குரிய உணவை உனக்குத் தேவையான நேரத்தில் கொடுத்து விட்டேன். நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய். திரும்பிப் பார்க்கும் முயற்சிகூட இல்லையென்றால் உணவு எப்படிக் கிடைக்கும்? உழைக்காமல் உண்ணக்கூடாது. அப்பொழுதுதான் இறைவனின் அருள் பூரணமாகக் கிடைக்கும் என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார். அதே போல் நீ தியானம் செய்து கொண்டிருந்தாலும் உழைப்பும் சிறிதளவாவது வேண்டும். முயற்சி இல்லாமல் எதுவும் கிடைக்காது. உழைப்பவரை என்றுமே வறுமை அண்டாது. முயற்சி திருவினையாக்கும்! என்று குரு அறிவுரை கூறினார். |
|
|
|