|
திருமாலுக்கு மலர்க்கைங்கர்யம் செய்து வழிபட்டவர் தொண்டரடிப் பொடியாழ்வார். ரங்கநாதர் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். அவரைத் தவிர வேறு யாரையும் பாடாதவர். ஆதலால் இவருக்கு “பத்தினி ஆழ்வார் என்ற சிறப்புப்பெயர் உண்டு. இவர் ஸ்ரீரங்கத்தை அடுத்த திருமண்டங்குடி என்ற ஊரில் மார்கழி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார். இவரை திருமால் அணிந்துள்ள வைஜயந்தி மாலையின் அம்சம் என்பர். இவரது நிஜப்பெயர் விப்ர நாராயணன். வேதசாஸ்திரங்களை கற்று உணர்ந்தவர். சேனை முதலியார் என்பவர், இவருக்கு மந்திர உபதேசம் செய்து வைத்தார், ஸ்ரீரங்கத்தில் ஒரு நந்தவனம் அமைத்து மலர் பறிந்து மாலை கட்டி ரங்கனுக்கு சமர்ப்பித்து வந்தார். லட்சுமி தாயாரும் அவருடைய புஷ்பகைங்கர்யத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள், ஸ்ரீரங்கம் அருகில் உள்ள உத்தமர் கோவிலில் தேவதேவி என்ற தாசி வசித்து வந்தாள். ஒரு சமயம் அவள் தன் தோழியருடன், ஆழ்வாருடைய நந்தவனம் அருகில் நின்று கொண்டிருந்தாள். ஆழ்வார் அவளை கண்ணெடுத்தும் பார்க்காமல் தன் கைங்கர்யத்திலேயே ஆழ்ந்து இருந்தார்.
தன் அழகில் மிகுந்த கர்வம் கொண்ட தேவதேவி, ஆழ்வார் தன்னை பார்க்காததை அவமானமாகக் கருதினாள். ஆத்திரம் கொண்டாள். ஆழ்வாரை தனக்கு அடிமை ஆக்குவேன் என்று சபதம் எடுத்தாள். தன்னுடைய விலை உயர்ந்த பட்டாடைகள் ஆபரணங்கள் எல்லாவற்றையும் கழற்றித் தோழியிடம் கொடுத்தாள். அவளைப் போகச்சொல்லிவிட்டு ஓர் எளிமையான புடவையை உடுத்திக்கொண்டு, ஆழ்வாரிடம் சென்று அடி பணிந்து நின்றாள். “நீ யார் அம்மா? “ என்று ஆழ்வார் கேட்டார். “சுவாமி! முன் ஜன்மத்தில் செய்த பாபத்தின் பலனாக இந்த ஜன்மத்தில் தாசி குலத்தில் பிறந்திருக்கிறேன், மகாபாவியான எனக்கு நல்ல புத்தி வந்து தங்களுடன் நந்தவன கைங்கர்யம் செய்ய வந்திருக்கிறேன். நீங்கள் அனுமதித்தால் தோட்டப்பணி செய்து மாலை கட்டும் கைங்கர்யத்தைச் செய்கிறேன், என்று மிகுந்த பணிவுடன் கூறினாள். ஆழ்வாரும் அவள் சொல்வதை உண்மை என்று நம்பி அதற்கு அனுமதித்தார். தேவதேவியும் ஆழ்வாருக்கு தன்னிடம் முழு நம்பிக்கை வரும்படிச் செய்தாள். ஆறு மாதம் சென்றது. ஒரு நாள் பெருமழை பெய்தது. உள்ளே இருந்த விப்ரநாராயணர், தேவதேவி வெளியே மழையில் நனைவதைப் பார்த்து இரக்கம் கொண்டு மழையில் நனையாமல் இருக்க பர்ண சாலைக்கு உள்ளே வரும்படி அழைத்தார். ஆழ்வாரின் இரக்கத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, உள்ளே புகுந்து தன் அழகினாலும், இனிய பேச்சினாலும் ஆழ்வாரை மயக்கி தன் வலையில் வீழ்த்தினாள்.
ஆழ்வாரும் தேவதேவியே கதி என்று கிடந்தார். சிலகாலம் கழித்து பணம் இல்லாத ஆழ்வாரை அலட்சியம் செய்து தன் சொந்த ஊரான உத்தமர்கோவிலுக்குச் சென்று விட்டாள். ஆழ்வார் அவளை விட்டு பிரிந்திருக்க முடியாமல் அவள் வீட்டு வாசலிலே போய் காத்துக் கிடந்தார். ஆனால் தாசி அவரை வீட்டுக்குள் வரவிடவில்லை. ஆழ்வாரின் பரிதாபமான நிலைமையைப் பார்த்த லட்சுமி தாயார், ஆழ்வாருக்கு தாசி மேல் கொண்ட ஆசையை அகற்றி அவரை முன்போல் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட செய்ய வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டினாள். பெருமாளும் அதற்கு இசைந்தார். தன் கோவிலில் இருந்த ஒரு தங்க பாத்திரத்தை எடுத்துக் கொண்டு போய் ரங்கன் தேவதேவியிடம் கொடுத்தார். தேவதேவியும் “நீ யார் என்று கேட்க ரங்கன், விப்ரநாராயணன் இந்தத் தங்க வட்டிலை உம்மிடம் கொடுக்கச் சொன்னார், என்று கூறிச் சென்றார். மகிழ்ச்சி அடைந்த தேவதேவி ஆழ்வாரை வரவழைத்து சந்தோஷமாக இருக்க அனுமதித்தாள்.
மறுநாள் காலை ஸ்ரீரங்கம் கோவிலில் தங்கப் பாத்திரம் காணாமல் வட்டில் திருட்டு போனது பற்றி விசாரணை செய்தனர். தேவதேவியின் வீட்டில் வட்டில் இருக்கக் கண்டு அவளை விசாரித்தனர். அவளும் “அழகிய மணவாளதாசர் என்பவர், விப்ரநாராயணர் அனுப்பியதாகச் சொல்லி என்னிடம் இதைக் கொடுத்தார் என்றாள். விப்ரநாராயணரை விசாரித்ததில் “நான் மிகவும் ஏழை, நான் யாரையும் பாத்திரத்துடன் தேவதேவியிடம் அனுப்பவில்லை என்றார். அன்று இரவு அரசன் கனவில் ரங்கன் தோன்றி, யாரும் தவறு செய்யவில்லை. எல்லாம் என்திருவிளையாடல், என்றார். ஆழ்வாரும் தான் செய்த தவறுக்கு மாறாக, திருமாலின் அடியவர்களின் பாதங்களைக் கழுவி அந்த நீரை ஸ்ரீபாததீர்த்தம் என ஏற்று தன்னை பரிசுத்தனாக்கிக் கொண்டு மீண்டும் நந்தவனக் கைங்கர்யத்தைத் தொடர்ந்தார். அதனால் அவருக்கு தொண்டரடிப் பொடியாழ்வார் என்று பெயர் ஏற்பட்டது. இவர் ரங்கநாதரைப் பற்றி 55 பாசுரங்கள் பாடியுள்ளார். தேவதேவியும் ரங்கனுக்கே தன் செல்வம் முழுவதையும் அர்ப்பணித்தாள். திருமால் பக்தர்களின் பாத தீர்த்தத்தை பருகி பரிசுத்தமானாள். |
|
|
|