|
கோவில்களுக்குப் புகழ் பெற்ற நகரம் கும்பகோணம். இந்த ஊரின் மத்தியில் உள்ள பிரம்மாண்டமான கோவிலில் குடி கொண்டுள்ளார் அருள்மிகு சார்ங்கபாணி பெருமாள். சார்ங்கபாணி என்ற பெயர் வித்தியாசமாக தோன்றுகிறதல்லவா? சார்ங்கம் என்றால், தெய்வீக வில் என்று பொருள். பாணி என்றால், கரத்தில் ஏந்தியவன் என்று அர்த்தம். சார்ங்கம் என்ற வில்லைத் தன் கரத்தில் ஏந்திய நிலையில் தரிசனம் தருவதால், இவர் சார்ங்கபாணி ஆனார். ஆனால், எழுத்திலும் பேச்சிலும் சார்ங்கபாணி என்று பிரயோகப்படுத்தப் பலருக்கும் சிரமம் போலும்! சாரங்கபாணி ஆகி விட்டார். நாமும் சாரங்கபாணி என்றே பார்ப்போம். சாரங்கபாணி கோவிலில் திருத்தாயாராக அருளக்கூடிய கோமளவல்லித் தாயார், பிறந்து வளர்ந்த ஊரே கும்பகோணம் தான். கோமளவல்லித் தாயாரின் திருக்கரம் பிடிக்க, இந்த ஊருக்கு மாப்பிள்ளையாக வந்தவர் சாரங்கபாணி பெருமாள். கோமளவல்லியைத் திருமணம் செய்து கொண்டு வீட்டோடு (ஊரோடு) மாப்பிள்ள ஆகி விட்டார். சொந்த ஊர்க்காரி என்பதால் கோமளவல்லித் தாயாருக்குத்தான் முதல் மரியாதை.
வருகின்ற பக்தர்களும் தாயாரைத் தரிசனம் செய்து விட்டு, அதன் பின் சாரங்கபாணியைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இது தான் இங்கே நடைமுறை. இதற்குத் தோதாக கோவில் அமைப்பும் அமைந்துள்ளது விசேஷம். கோமளவல்லியைத் திருமணம் செய்து கொள்ள வைகுண்டத்தில் இருந்து, தேரில் வந்து இறங்கினார் சாரங்கபாணி பெருமாள். எனவே, இங்கு பெருமாள் குடி கொண்டிருக்கும் திருச்சன்னிதி தேர் போன்ற அமைப்பில் உள்ளது. பெருமாளே நேரில் வந்து இறங்கிய காரணத்தால் இந்தத் திருத்தலத்தை நித்ய வைகுண்டம், பூலோக வைகுண்டம் என்றெல்லாம் போற்றுகிறார்கள். இந்தக் காரணத்தால், சாரங்கபாணி கோவிலில் சொர்க்க வாசல் என்பது தனியே கிடையாது. வைகுண்டத்தில் இருந்து வந்த இந்தப் பெருமாளை வணங்கினாலே, பரமபதம் என்று சொல்லக்கூடிய முக்தி பக்தர்களுக்குக் கிடைத்து விடும். பெருமாளே தேரில் வந்து இறங்கிய காரணத்தால், சாரங்கபாணி கோவிலில் சித்திரை மாதம் நடக்கக் கூடிய தேர்த் திருவிழா வெகு சிறப்பு.
லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ, இந்த விழா நடக்கும். தமிழகத்தில் உள்ள உயரமான தேர்களில் சாரங்கபாணி கோவில் தேருக்கு மூன்றாவது இடம். முதல் இரண்டு இடம் திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்துõர். தமிழகத்திலேயே உயரமான ராஜகோபுரத்தைக் கொண்ட கோவில்கள் வரிசையில் சாரங்கபாணி திருக்கோவில் மூன்றாவது இடம். முதல் இரண்டு இடத்தில் உள்ளவை: ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்துõர். அதிக ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசத் திருத்தலங்கள் வரிசையில் கும்பகோணம் சாரங்கபாணிக்கு மூன்றாம் இடம். பதினோரு ஆழ்வார்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளதில் ஸ்ரீரங்கம் முதலாம் இடம். ஒன்பது ஆழ்வார்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ள திருமலை திருப்பதி இரண்டாம் இடம். ஏழு ஆழ்வார்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ள சாரங்கபாணி பெருமாள் கோவில் மூன்றாம் இடம். மங்காளாசாசனம் செய்து, ஆழ்வார்கள் பாடியுள்ள பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ஆகும். வைணவ ஆலயங்களில் நித்தமும் பிரபந்தம் ஒலித்துக் கொண்டிருக்கும். திவ்யதேசத் திருத்தலங்களின் பெருமைகளை நாம் அறிந்து கொள்வதற்கு நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் தான் உதவியாக உள்ளது.
இந்த நாலாயிரத் திவ்யப் பிரபந்தத் தொகுப்பு இன்றைக்கு நம் கையில் தவழ்வதற்கு சாரங்கபாணி பெருமாள் ஒரு காரணமாக இருந்துள்ளார் என்பது கும்பகோணத்துக்கு பெருமை சேர்க்கும் செய்தி. இரண்டாம் நுõற்றாண்டில் வாழ்ந்தவர் நாதமுனிகள் என்கிற வைணவ ஆச்சார்யர். பெருமாள் குடி கொண்டிருக்கும் ஆலயங்களை யாத்திரையாகச் சென்று தரிசித்தவர், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாளிடம் வந்தார். பெருமாள் அழகில் மனம் நெகிழ்ந்து தரிசித்துக் கொண்டிருந்தவருக்கு, மிகப் பெரிய யோகம் அடித்தது. ஆம்! நாதமுனிகளிடம் ஒரு பெரும் பணியை ஒப்படைக்கத் திருவுளம் கொண்டார் சாரங்கபாணி பெருமாள். உளமார மூலவரைத் தரிசித்துக் கொண்டிருந்த நாதமுனிகளுக்கு தன் புகழ் பாடும் அழகான பாடலைக் கேட்கும் வாய்ப்பை அருளினார் பெருமாள். ஆராவமுதே... எனத் தொடங்கும் பத்துப் பாசுரங்கள் தங்கு தடை இல்லாமல் அங்கே பாடப்பட்டுக் கொண்டிருந்தது. ஆழ்ந்த பொருள் செறிவுடன் வந்த அந்தப் பாசுரங்கள் நாதமுனிகளைப் பரவசம் கொள்ள செய்தது. இந்தப் பாசுரங்களின் நடுவே குருகூர் சடகோபன் சொன்ன ஆயிரம் பாசுரங்களில் இந்தப் பத்தும் என்பதாக ஒரு வரி வந்தது. குறிப்பிட்ட இந்த வரியைக் கேட்ட மாத்திரத்தில் விழித்துக் கொண்டார் நாதமுனிகள்.
பெருமாளின் திருவுளமும் அதுதானே! ஆயிரத்தில் இந்த பத்து மட்டும் தானா? பத்தே பஞ்சாமிர்தம் போல் இனிக்கிறது என்றால், மற்றவை எப்படி இருக்கும்? என்று வியந்தார். மீதிப் பாசுரங்களை எப்படிப் பெறுவது என்று தவித்தார். அதற்கு பதிலாக, மீதிப் பாசுரங்களை ஆழ்வார்திருநகரியில் இருக்கும் நம்மாழ்வாரிடம் போனால் பெற்றுக் கொள்ளலாம் என்று சாரங்கபாணி பெருமாளே நாதமுனிகளுக்கு அருளினார். அதன்பின், நம்மாழ்வாரைத் தேடிச் சென்று எஞ்சிய பாசுரங்களையும் பெற்றுத் தொகுத்து, நாலாயிரத் திவ்ய பிரபந்தங்களை உலகிலுள்ளோர் அறியும் வண்ணம் வெளியிட்டார் என்பது ஆன்மிக வரலாறு. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் தந்த பெருமைக்குரியவர் இந்த சாரங்கபாணி பெருமாள்! ஓர் ஆலயம் என்றால், எண்ணற்ற திருவிழாக்கள், விசேஷங்கள் இருக்கும். பிரம்மாண்டமான சாரங்கபாணி ஆலயத்திலோ நித்தமும் திருவிழா மயம்தான்! இதில் மிகவும் வித்தியாசமான ஒரு வைபவம் ஐப்பசி மாத அமாவாசையன்று நடக்கிறது. இந்த வைபவம் பெருமாளுக்கு பக்தர்கள் செய்வது அல்ல. பெருமாள் தன் பக்தனுக்கு செய்கிற வைபவம்.
முன்னொரு காலத்தில் நாராயண சுவாமி என்கிற பக்தர் கும்பகோணத்தில் வசித்து வந்தார். அவருக்கு சாரங்கபாணி பெருமாள் தான் எல்லாமே! ஆலயத் திருப்பணிகள் அத்தனையையும் எடுத்துப் போட்டுச் செய்வார். பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்பதற்காக பிரம்மச்சாரி யாகவே வாழ்ந்தார். ஒரு தீபாவளி தினத்தன்று இவர் பெருமாளின் திருவடிகளை அடைந்தார். இவருக்கு ஈமச்சடங்குகள செய்ய அவரது உறவினர்கள் எவரும் முன்வரவில்லை. அப்போது, சாரங்கபாணி பெருமாளே ஒரு இளைஞனாக வந்து சடங்குகள் செய்து முடித்தார். இதை நினைவுபடுத்தும் விதமாக இன்றைக்கும் ஒவ்வொரு ஐப்பசி அமாவாசைஅன்றும் நாராயண சுவாமிக்குப் பெருமாளே சிராத்தம் செய்யும் ஐதீக நிகழ்வு ஆலயத்தில் நடந்து வருகிறது. இந்தப் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபட்டுப் பேறு பெறுகின்றனர் பக்தர்கள். இன்னும் தரிசிப்போம்... |
|
|
|