|
கிருஷ்ண பக்தரான துக்காராம் தனக்கென உள்ளதைப் பிறருக்கு கொடுத்து மகிழ்பவர். ஒருநாள் அவருடைய மனைவி வண்டி நிறைய கரும்புகளை ஏற்றி, சந்தையில் விற்று வரும்படி அனுப்பி வைத்தாள். ஏழைச் சிறுவன் ஒருவன் வண்டியைப் பின் தொடர்ந்தான். கரும்பு தின்ன வேண்டும் என்ற ஏக்கம் அவன் முகத்தில் வெளிப்பட்டது. கையில் காசில்லை. இதை உணர்ந்த துக்காராம் சிறுவனுக்கு ஒரு கரும்பை அன்புடன் கொடுத்தார். அதைக் கண்ட மற்ற சிறுவர்களும் துக்காராமைச் சூழ்ந்து விட்டனர். இப்படியே போவோர் வருவோரெல்லாம் ஆளுக்கொரு கரும்பாக வாங்கிச் செல்ல, மொத்தக் கரும்பும் காலியானது. கடைசியில் ஒரே ஒரு கரும்பு மட்டும் மிச்சமிருந்தது. துக்காராம் வீடு வந்து சேர்ந்தார். விஷயமறிந்த அவரது மனைவிக்கு கோபம் தலைக்கேறியது. ஒற்றைக் கரும்பைக் கையில் எடுத்தாள். கணவரை ஆத்திரம் தீர விளாசித் தள்ளினாள். அந்த தண்டனையையும் மனைவி அளித்த பரிசாக ஏற்றுக் கொண்டார் துக்காராம். அடித்ததில் கரும்பு இரண்டு துண்டாக ஒடிந்து விழுந்தது. அதைக் கண்டதும் துக்காராம், “என் அன்பே...! ஒற்றைக் கரும்பு ஒடிந்ததும் நன்மைக்காகத் தான். இருவரும் ஆளுக்கொரு துண்டாக சுவைத்து மகிழலாம்” என்று சொல்லி சிரித்தார். இதைக் கேட்ட மனைவியும் கோபம் தணிந்து சிரித்து விட்டாள். |
|
|
|