|
குருகுலத்தில், ஆசிரியர் ஒருநாள், இம்மையில் செய்யும் தானதர்மம், இம்மையிலும், மறுமையிலும் நன்மையைத் தரும் என சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த சீடர், குருவே! தானதர்மம் செய்வதற்கு உதாரண புருஷனாயிருந்த கர்ணன், போரில் தோற்று அல்லவா மரணமடைந்தான். பரமாத்மாவான திருமாலுக்கே தானம் தந்த மகா புண்ணியவான் அவன். அவன் செய்த தருமங்கள் அவன் உயிரைக் காப்பாற்றாதது, ஏன்? எனக் கேட்டான். அதற்கு குரு, முதலில் தானம் என்பது என்ன? தர்மம் என்பது என்ன? எனத் தெரிந்துகொண்டு கர்ணன் வாழ்க்கையை ஆராயலாம். பிறர் தன் கஷ்டத்தைக் கூறி, அதற்கு நிவாரணமாய் நாம் உதவி செய்வது அல்லது அவரது துயரத்தை பிறர் வாயிலாய் அறிந்து, அதைப் போக்குவது தானமாகும். சுசீலை, குசேலரிடம், உங்கள் நண்பர் கிருஷ்ணரிடம் நம் கஷ்டங்களைக் கூறி, ஏதேனும் தானம் பெற்று வாருங்கள்! என்றே கூறுகிறாள். கேட்டுப் பெறும் தானம், புண்ணியத்தைத் தராது.
தர்மம் என்பது, பிறர் கஷ்டங்களை நாமே உணர்ந்து, அதைத் தீர்ப்பது. இதுவே பல புண்ணியப் பலன்களைத் தருவது. குசேலரின் கோலத்தைப் பார்த்தே அவர் நிலையை கிருஷ்ணன் புரிந்துகொண்டு அருள்பாலித்ததே தர்மம். ஏற்பது இகழ்ச்சி என்பதற்கேற்ப, தன் நிலையைக் கூறவும் தாழ்வாய் உணரும் மக்களுக்கு அவர் சங்கடம் உணர்ந்து அதனைப் போக்குவதே உயர்ந்த தர்மம். கர்ணன் தன் வாழ்வில் தானதருமங்கள் ஏராளமாகச் செய்துள்ளான். ஆனால் மக்களைக் கஷ்டத்திலிருந்து காப்பாற்றுவது மன்னனின் கடமைதானே! ஆதலால் கர்ணனிடம் நிறையப்பேர் உதவி கேட்டுப் பெற்றிருந்தாலும், அது தானமாகிறது. அதைச் செய்ய வேண்டியது அரசனான கர்ணனின் கடமை என்பதால் அதில் புண்ணியம் ஏதுமில்லை. கர்ணன் பிறர் கேட்காமலே செய்த தருமங்களும், அதனால் விளைந்த புண்ணியப் பலன்களும் உண்டு. ஆனால் அதை கிருஷ்ணர் போர்க்களத்தில் தானமாய் பெற்றுவிட்டார்! ஆக, கர்ணன் செய்த தர்மங்களும் பலனற்றுப் போய்விட கர்ணன் சாதாரணனாகி விட்டான். அதனால்தான் எந்த தர்மமும் அவனைக் காக்கவில்லை. குருவின் பதிலால் தெளிவு பெற்ற சீடன், தர்மத்தின் மகிமையை தெரிந்துகொண்டேன். |
|
|
|