|
ஆற்றில் தண்ணீர் நிறைய ஓடிக்கொண்டிருந்தது. கரையில் தன் சீடனுடன் நின்று கொண்டிருந்தார் குரு. அவர்களுக்கு சற்று தள்ளி ஒரு பெண் குரங்கு தன் குட்டியைத் தூக்கி ஓடும் தண்ணீரில் போட்டது. குட்டியின் வால் தாய் கையில் இருந்தது. குட்டி பயந்து போய் தாயிடமே வந்தது. மீண்டும் தாய், குட்டியைத் தண்ணீரில் போட்டது. ஐந்தாறு முறைக்குப் பிறகு குட்டி பயம் இல்லாமல் நீந்தத் துவங்கியது. தாய்க்குரங்கு அதன் வாலை விட்டிருந்தது. குருவைப் போலவே சீடனும் இதைப் பார்த்துக்கொண்டிருந்தான். குரு கேட்டார், இதிலிருந்து உனக்குத் தெரிந்தது, என்ன? சீடன் பணிவுடன் சொன்னான், தெரியவில்லை, சுவாமி! குரு சொன்னார், குட்டிக்கு, நீச்சல் என்னும் நல்ல விஷயத்தைச் சொல்லிக் கொடுக்க தாய் நினைத்தது. எனவே மறுபடியும் மறுபடியும் அன்னை தண்ணீரில் போடவே, குட்டி பயம் தெளிந்து நீந்த ஆரம்பித்துவிட்டது. மனிதனும் இப்படித்தான். நல்லதைக் கற்றுக் கொள்ள பயப்படுகிறான். சில நன்மைகள் செய்து பழகிவிட்டால் பயம் தெளிந்துவிடும். அதன்பிறகு நன்மையை, நல்லதை மட்டுமே செய்வான். சீடனுக்குப் புரிந்தது. |
|
|
|