|
கரூர் பண்டிட் ராமசர்மா என்ற ஆயுர்வேத வைத்தியர். சக்திவிலாச வைத்தியசாலையை நிறுவி மருத்துவம் பார்த்தவர். கே.பி. சுந்தராம்பாள், தீரர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் அவரிடம் மருத்துவம் பார்த்தனர். ஓவியரான நாமக்கல் கவிஞர், தன் ஆரோக்கியத்தை மீட்டுத் தந்த அவருக்கு, அழகிய முருகன் வண்ணப்படத்தை வரைந்தளித்தார். ராமசர்மா, மகாபெரியவரின் பக்தர்.பெரியவர் கரூர் வந்தால் அவர் இல்லத்தில் தான் தங்குவார். ஒரு முறை பெரியவர் தனக்குக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும், ராமசர்மாவைக் காஞ்சிபுரம் வருமாறும் சொல்லியனுப்பினார். ராமசர்மாவும் வந்தார். அவருடைய மருந்துப் பெட்டியை பார்த்து பெரியவர் முகத்தில் புன்முறுவல்! உன்னைத்தான் வரச் சொன்னேனே தவிர, மருந்துப் பெட்டியோடு வான்னு சொல்லலியே! என்றார். ராமசர்மா திகைத்தார். உங்களுக்கு காய்ச்சல் என்று சொன்னதால், மருந்துப் பெட்டியோடு வந்தேன்! என்றார். உடல் என்றிருந்தால் எப்போதாவது காய்ச்சல் வருவது சகஜம் தான். காய்ச்சலே உடலைக் குணப்படுத்தத் தானே வருகிறது! அது சரி... நோயைக் குணப்படுத்த மருந்து எதற்கு! அதற்கு வேறொரு வித்தியாசமான மருந்து இருக்கிறது! அதைப் பிரயோகம் பண்ணத்தான் உன்னை வரச் சொன்னேன்!
ராமசர்மாவுக்குப் புரியவில்லை. அமைதி காத்தார். பெரியவர் தொடர்ந்தார். நீ குளிச்சுட்டுத்தான் வந்திருப்பாய். இரு... நான் இன்னொரு முறை குளிச்சுட்டு வந்துடறேன்! காய்ச்சல் இருக்கும்போது குளிக்கிறேன் என்கிறாரே! ராமசர்மாவின் மனம் பதறியது. ஆனால் மறுத்து எதுவும் சொல்லத் தோன்றவில்லை. பெரியவர் வரும் வரை காத்திருந்தார். குளித்துவிட்டு வந்த பெரியவர் தன் உடல் உஷ்ணத்தை அளந்து பார்க்கச் சொன்னார். தெர்மாமீட்டர் மூலம் பார்த்ததில் காய்ச்சல் இருப்பது உறுதியானது. நல்லது... நாம் இருவரும் இப்போது விஷ்ணு சகஸ்ரநாமம் ஜெபிக்கப் போகிறோம்! என்றார் பெரியவர். இருவரும் இணைந்து ஜெபித்தார்கள். ஜெபம் நிறைவடைந்ததும் பெரியவர் தன் உடல் வெப்பத்தை மறுபடி சோதிக்குமாறு கூறினார். என்ன ஆச்சரியம்! காய்ச்சல் முற்றிலும் குணமாகி இருந்தது! உடனே பெரியவர் சர்மாவிடம், விஷ்ணு சகஸ்ரநாம ஜெபம் செல்வத்தை மட்டுமல்ல, ஆரோக்கியம் உள்ளிட்ட எத்தனையோ பயன்களைத் தரக் கூடியதுன்னு நான் ஓயாம சொல்றேன்.
ஜனங்களும் கேட்கறா. அவாளுக்கு அது உண்மைதான்னு நான் நிரூபிச்சுக் காட்ட வேண்டாமோ? அதுக்குத்தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திண்டேன். கடவுள் நாமம் பிறவிப் பிணியைத் தீர்க்கும்னு தமிழ் சொல்றது. பிறவிப் பிணியையே நீக்கும்னா, பிறவியிலே வர்ற பிணியை நீக்காதா? நோயாளிகளுக்கு நீ வழக்கம்போல மருந்து கொடு. வியாதி வந்தா மருந்து சாப்பிட வேண்டியதுதான். ஆனால், கூடவே விஷ்ணு சகஸ்ரநாமம்கிற மருந்தையும் சேத்துப் பயன்படுத்தலாமே? உன்னைத் தேடி வர்றவாள் கிட்ட, நீ இதையும் உன் பிரிஸ்க்ரிப்ஷன்ல சேத்துக்கலாம் இல்லையா? அதுக்கு ஒனக்கு நம்பிக்கை வரத்தான், உன்னை வரச்சொன்னேன். காந்தி இயற்கை வைத்தியத்தைக் கொண்டாடினாருன்னு உனக்கு தெரியும். இயற்கை வைத்தியத்துல பிரார்த்தனைக்கு தான் முதலிடம், என சொல்லி விட்டு குழந்தை போல் சிரித்தார். -திருப்பூர் கிருஷ்ணன்
|
|
|
|