|
நூற்றுக்கணக்கான யாகங்களும், கடும் தவமும் செய்து அடையக்கூடியது, இந்திர பதவி. ஒரு சமயம், தேவலோகத்தில், தேவேந்திரன் தலைமையில் சபை கூடியது. அப்போது, அசுர மன்னர் ஒருவர் அங்கு வந்தார். அவரது தேஜஸ் நிறைந்த தோற்றத்தைக் கண்டதும், தங்களையறியாமலேயே எழுந்து நின்று, மரியாதை செய்தனர், தேவர்கள். அசுர மன்னனின் தேஜசில் பங்கப்பட்டுப் போன தேவேந்திரன், அங்கிருந்து மறைந்தார். தங்கள் தலைவரான தேவேந்திரனை காணாமல் திகைத்து, மனம் வருந்தினர் தேவர்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, தேவேந்திரன் பதவியை நான் வகித்து, நல்ல விதமாக ஆண்டு வருவேன்; கவலையை விடுங்கள்... எனக் கூறி, தேவேந்திரனுடைய ஆசனத்தில் அமர்ந்தார், அசுர மன்னர். நிர்வாகம் நல்லபடியே நடந்து வந்தது. இந்நிலையில், அசுர மன்னரிடம் ஜொலிக்கும் தெய்வீக தேஜசுக்கான காரணத்தை அறிய, வேதிய சிறுவனாக வடிவெடுத்து, சபைக்கு வந்த தேவேந்திரன், ஒளி பொருந்திய தாங்கள், அடியேனை சீடனாக ஏற்க வேண்டும்... என, வேண்டுகோள் விடுத்தார்; மன்னரும் ஏற்றுக் கொண்டார்.
தேவேந்திரன் செய்த ஆத்மார்த்தமான பணிவிடையில் மகிழ்ந்த அசுர மன்னர், பல விதமான ஞானங்களை தேவேந்திரனுக்கு போதித்தார். அப்போது, மூவுலகங்களையும் ஆட்சி செய்யும் திறமையை, தாங்கள் எவ்வாறு பெற்றீர்கள்? என கேட்டார் தேவேந்திரன். என் குருநாதர் சுக்கிராச்சாரியார் சொன்ன சொல்லை, நான் ஒருநாளும் மீறியதில்லை. அவர் எது சொன்னாலும், அது, என் நன்மைக்கே என்று ஏற்றுக் கொள்கிறேன். குரு பக்தி, மன அடக்கம் மற்றும் புலனடக்கம் போன்ற ஒழுக்கத்தின் காரணமாக, நற்பண்புகள் மலர்ந்தன. அதனாலேயே, மூவுலகாளும் திறமையை பெற்றேன்... என்றார், அசுர குரு. அவரது பதிலிலிருந்து, நன்னடத்தையும், ஒழுக்கமுமே எல்லா நலன்களையும் தரவல்லவை... என, உணர்ந்து கொண்டார் தேவேந்திரன். சீடனே... உன் பணிவிடை என்னை மகிழ்விக்கிறது; வரம் ஏதேனும் கேட்டு பெற்றுக் கொள்... என்றார், அசுர மன்னர். உடனே, தங்கள் நன்னடத்தையை தாருங்கள்... எனக் கேட்டார் தேவேந்திரன்.
அசுர மன்னர் திகைத்தார். இப்படிப்பட்ட வரம் கேட்கும் இச்சீடன், சாதாரண வேதிய சிறுவனாக இருக்க முடியாது... என, எண்ணும் போதே, அசுர மன்னரின் உடலில் இருந்து, ஒளிமயமான தேவதைகள் வெளியேறின. என்னிலிருந்து வெளிப்படும் நீங்கள் எல்லாம் யார்? எனக் கேட்டார், அசுர மன்னர். நாங்க ௌல்லாம் நேர்மை, சத்தியம், நற்செயல், சக்தி மற்றும் செல்வம் எனும் தேவதைகள். உன் சீடனாக வந்திருப்பது தேவேந்திரன்; இதுவரை, நீ கவனமாக பாதுகாத்து வந்த நன்னடத்தை, இனி, அவனுக்கு உரியதாகி விட்டது. நன்னடத்தை உள்ள இடத்தில் தான், நாங்கள் இருப்போம். ஆகையால், இனி தேவேந்திரனிடம் தான் இருப்போம்... என சொல்லி, தேவேந்திரன் உடலில் புகுந்தன. ஒளி வீசும் தேஜசுடன், மறுபடியும், தன் பதவியை பெற்றார், தேவேந்திரன்; தேவர்கள் மகிழ்ந்தனர். அசுர மன்னரை போல, அசிரத்தையாக, யாருக்காகவும், நன்னடத்தையை கை விடக்கூடாது. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். அதுவே, நல்லவைகளை தரும்! |
|
|
|