|
காஞ்சிப்பெரியவர் தரிசனத்திற்கான பக்தர்கள் வரிசை விறுவிறுவென்று நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு தம்பதி தீர்த்தப் பிரசாதம் வாங்கி கொண்டிருந்த போது, நகர்ந்து கொண்டிருந்த வரிசை, சற்று தடைபட்டது. காரணம் அந்த தம்பதி, தணிந்த குரலில் பெரியவரிடம் தங்கள் கோரிக்கையை முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். கணவருக்கு வயது நாற்பதும். மனைவிக்கு முப்பத்தைந்தும் இருக்கும். எவ்வளவோ வேண்டுதல்களை நிறைவேற்றியும் பற்பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டும் அவர்களுக்கு இதுவரை குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தங்களுக்கு குழந்தை வேண்டும் என்பது அவர்கள் வேண்டுதல். ஆக சுதானந்தம் வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்.
சுதா என்றால் குழந்தை. மழலைச் சொல் கேட்டும், அதன் விளையாட்டுகளைப் பார்த்தும் கிடைக்கிற ஆனந்தத்திற்கு சுதானந்தம் என்று பெயர். குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்ன்னு திருவள்ளுவர் சொல்லியிருக்காரே! என்று சொல்லி விட்டு கலகலவென்று சிரித்தார் பெரியவர். ஒரு குழந்தை சிரிப்பதை போல் இருந்தது அவரது சிரிப்பு. சற்றுநேரம் அவர்களை காத்திருக்குமாறு பணித்தார். வரிசை நகர்ந்தது. வரிசையில் ஒருவர் மூன்றே மாதமான பச்சிளம் குழந்தையைப் பாதுகாப்பாக கையில் ஏந்தி வந்து கொண்டிருந்தார். அவர் சுவாமிகள் முன்னிலையில் குழந்தையை வைத்துவிட்டுச் சொன்னார்: நான் பெரிய குடும்பஸ்தன். ஐந்து குழந்தைகள். இந்தக் குழந்தை பக்கத்துப் போர்ஷன் தம்பதியின் ஆண் குழந்தை. அவர்கள் அண்மையில் விபத்தில் காலமாகி விட்டார்கள். இந்தக் குழந்தை மட்டும் தப்பி விட்டது. இறந்தவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள் என்பதால், இருதரப்பு
பெற்றோரும் இந்த குழந்தையை ஏற்க மறுத்து விட்டனர். எனக்கு இந்தக் குழந்தையையும் வளர்க்குமளவு வசதி இல்லை. சுவாமிகள் தான் இந்த பிரச்னைக்கு தீர்வு சொல்ல வேண்டும்! கலகலவென்று தன் தெய்வீகச் சிரிப்பை உதிர்த்த பெரியவர், தள்ளி நின்ற தம்பதியை அழைத்தார்: சூநீங்கள் கேட்ட பாக்கியத்தை பகவான் உடனே கொடுத்து விட்டார் பார்த்தீர்களா? இது உங்கள் வீட்டில் வளரவேண்டிய குழந்தை. நீங்கள் பெற்ற குழந்தை தான் இது. இவரிடமிருந்து பெற்றுக் கொள்கிறீர்களே? அப்போது பெற்ற குழந்தை என்று தானே அர்த்தமாகிறது! எங்கோ பிறந்து இன்று நீங்கள் என்னைத் தேடிவந்த நேரத்தில் சரியாக இது உங்களை நாடி வந்திருக்கிறது. அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நு?று அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம். அத்தனை புண்ணியம்! இந்தக் குழந்தை சங்கர ப்ரசாதம் என்பதால் சங்கரன் என்று பெயர் வைத்து உங்கள் குழந்தையாக வளர்த்து வாருங்கள்!சூ என்றார் பெரியவர். தொடர்ந்து பேசிய பெரியவர், சங்கரன் என்ற பெயர் வைத்தாலும் கூப்பிடும்போது சங்கு என்று கூப்பிடுவார்கள் தெரியுமோ? விஷ்ணு கையில் சங்கு உள்ளது அல்லவா? சைவ, வைணவ ஒற்றுமை எப்படி இயல்பாக நடந்து விடுகிறது பாருங்கள்! மறுபடியும் நகைத்தார் பெரியவர். குழந்தையை கொடுத்தவர் விழிகளிலும், பெற்று கொண்டவர்கள் விழிகளிலும் ஆனந்தக் கண்ணீர் திரையிட்டது. - திருப்பூர் கிருஷ்ணன் |
|
|
|