|
விவசாயி முருகனுக்கு வெறுப்பு உண்டானது. நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள். ஆனால், கெட்டவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே... கடவுள் இருந்தால் உலகில் இந்த நிலை உண்டாகுமா என்ற கேள்வி எழுந்தது. விடை தேடும் முயற்சியில் வீட்டை விட்டு கிளம்பிய அவர், கால் போன போக்கில் நடந்தார்.வழியில் இளைஞன் ஒருவனைக் கண்டார். “ஐயா... நானும் உங்களுடன் துணையாக வருகிறேன்” என்றான் அவன். “ நல்லவனாக இருக்கும் இவன், படித்தவனாகவும் தெரிகிறான்” என முருகன் சம்மதித்தார். இருவரும் அன்றிரவு ஒரு ஊருக்குள் நுழைந்தனர். பணக்காரன் ஒருவனின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தனர். தற்பெருமை மிக்க அந்த பணக்காரன், இருவரும் தன்னை புகழ வேண்டும் என்பதற்காக வயிறார உணவு கொடுத்தான். இளைஞன், பணக்காரனுக்கு தெரியாமல் அங்கிருந்த பணப்பையை திருடினான். அதை கண்ட முருகன், “திருடனான இவன் கூட நட்பு கொண்டோமே...” என மனதிற்குள் வருந்தினார். மறுநாள் காலையில் இருவரும் பணக்காரனிடம் விடை பெற்று புறப்பட்டனர். காட்டு வழியில் நடந்த அவர்கள், வழியில் கிடைத்த பழங்களை சாப்பிட்டு பகல் பொழுதை கழித்தனர். இரவு மற்றொரு ஊரில் தங்க நேர்ந்தது. அங்கிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் படுத்தனர்.
பசியால் து?க்கம் வரவில்லை. வீட்டின் சொந்தக்காரனான கஞ்சன் ஒருவன் இருந்தான். புதியவர் இருவரையும் அவன் கண்டு கொள்ளவில்லை. பசி அதிகரித்ததால் இளைஞன் கதவைத் தட்டி, “ஐயா! எங்களுக்கு பசிக்கிறது. கொஞ்சம் உணவளித்தால் மகிழ்வோம்” என்றான் கஞ்சனிடம். வந்தவனுக்கும், போனவனுக்கும் அள்ளித் தர இங்கு கொட்டியா கிடக்குது?” என கத்தினான் கஞ்சன். ஆனால், இளைஞன் நம்பிக்கை இழக்காமல் நின்றான். சிறிது நேரத்தில் மனம் இரங்கிய கஞ்சன் கொஞ்சம் கூழும், தண்ணீரும் கொடுத்தான். கூழை குடித்த இருவரும் நிம்மதியாக து?ங்கினர். மறுநாள் காலையில் கிளம்பிய இளைஞன், பணப்பையை கஞ்சன் வீட்டில் வைத்து விட்டுப் புறப்பட்டான். இதைக் கண்ட முருகனுக்கு குழப்பம் உண்டானது.
“இவனுக்கு என்ன பைத்தியமா.... விரும்பி உபசரித்தவன் வீட்டில் பணப்பையை திருடினான். ஆனால், வேண்டா வெறுப்பாக கூழ் கொடுத்தவனுக்கு பரிசளிக்கிறான்....” என வியந்தார். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஒளியாக மாறிய இளைஞன் அங்கிருந்து மறைந்தான். “உழவனே... உண்மையை உணர்த்தவே உன்னோடு வந்தேன். நம்மை உபசரித்த பணக்காரன் தற்பெருமை கொண்டவன். பணம் நிலையற்றது என்பதை உணர்த்த அவனது பணப்பையைத் திருடினேன். இதை உணர்ந்து விட்ட அவன், வருங்காலத்தில் தற்பெருமை கொள்ளாமல் மற்றவருக்கு அதிகம் தானம் அளிப்பான். கஞ்சன் வீட்டில் பணப்பையை வைத்ததற்கும் காரணம் இருக்கிறது. ஏனோ தானோ என்று தானம் செய்தாலே நன்மை உண்டாகும் போது, மனம் விரும்பி தானம் செய்தால் இன்னும் நன்மை நடக்குமே என கஞ்சன் திருந்துவான். மேலோட்டமாக பார்த்தால் கொடுமை போல தோன்றலாம். நடப்பது எல்லாம் நன்மைக்கே என்பதை உணர்ந்தால் வாழ்வில் நிம்மதி நிலைக்கும்” என அசரீரி ஒலித்தது. இறைவனே இளைஞனாக வந்து தன் கேள்விக்கு விடை அளித்ததை அறிந்த விவசாயி முருகன், ஊர் திரும்பினார். |
|
|
|