|
ஒரு நாட்டின், ராஜகுருவாக இருந்தார், ராமசந்திர பட்டர் என்பவர். இறை சிந்தனையில் ஆழ்ந்திருந்த இவர், அரச போகத்தை விரும்பாமல், தினசரி உணவுக்கு கூட பிட்சை எடுத்து உண்டு, எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இவரது மனைவியும், பர்த்தாவுக்கேற்ற பதிவிரதையாய் இருந்தாள். இதனால், அகங்காரம் கொண்ட அந்நாட்டு அரசி,’ராஜகுருவாக இருந்தாலும், அரசர் கொடுத்தால் பெற வேண்டியது தானே... நாம் கொடுப்பதை பெற மறுத்து, நம்மை அவமதிக்கிறாரே... இவரை எப்படியாவது நம்மிடம் இருந்து பொருளை பெற வைத்து விட வேண்டும்...’ என எண்ணி, பட்டரின் மனைவியை அரண்மனைக்கு வரவழைத்து, அவளிடம் ஏராளமான பொன்னும், மணியும் அள்ளித்தந்து, ’இனிமேல், ராஜகுரு பிட்சை எடுக்கக் கூடாது...’ என்று சொல்லி அனுப்பினாள். அவற்றை பெற்று கொண்ட பட்டரின் மனைவி, அதை கணவரின் காலடியில் வைத்து, நடந்ததை சொன்னாள்.
’தேவி... இவற்றை நாம் ஏற்றால் மட்டுமல்ல, விரும்பினால் கூட, பெருமாள், நம்மை விட்டு விலகி விடுவார்...’ என்று சொல்லி, ’யாகத்தின் வடிவாக இருக்கும் பகவானிடம் இவற்றை சமர்ப்பிக்கிறேன்...’ என பிரார்த்தித்து, பொன்னையும், மணியையும், அக்னி குண்டத்தில் சமர்ப்பித்தார். இத்தகவல், அரசருக்கு தெரிந்தது. உடனே, பட்டரின் வீட்டிற்கு வந்து, ராமசந்திரரை வணங்கி, ’குருநாதா... அரசி, தங்கள் மனைவியிடம் அளித்த பொன்னையும், மணியையும், தயவு செய்து, தாங்கள் திருப்பியளிக்க வேண்டும்...’ என, வேண்டினார். அரசருடன் வந்தவர்கள் எல்லாம், ’என்ன நடக்கப் போகிறதோ...’என, ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், எவ்வித சலனமும் இல்லாமல், ’பெருமாளே... உன்னிடம் சமர்ப்பித்ததை, அரசர் கேட்கிறார்; அவற்றை திருப்பி தந்தருள வேண்டும்...’ என, வேண்டுகோள் விடுத்தார், பட்டர். ஹோமாக்கினியில் இருந்து, பொன்னும், மணியும் வெளிப்பட்டன; அவை, முன்பை விட, பல மடங்கு பிரகாசித்ததை கண்டு, அனைவரும் வியந்தனர். அவற்றை, அரசரிடம் அளித்தார் பட்டர். ’குருவே... என்னை மன்னித்து விடுங்கள்... தெரியாமல், தங்களை சோதித்து விட்டேன்...’ என வணங்கினார் அரசர். அச்செல்வங்களை, தானம் செய்தார் பட்டர். தெய்வ அருள் உள்ளோர், அனைத்து சக்திகளையும் பெற்றிருந்தாலும், எதன் மீதும் பற்று வைக்க மாட்டார்கள் என்பதை, விளக்கும் கதை இது.
|
|
|
|