|
அர்ஜுனன், பகவான் கிருஷ்ணரிடம், மனதைக் கையாளுவது, காற்றை அடக்குவதுபோல் கடினமாக இருப்பதாகக் கூறி, அதனை எப்படி நெறிப்படுத்துவது என்று கேட்டான். பகவான், அலைபாய்ந்துகொண்டிருக்கும் தன்மையுடைய மனம் அடக்குதற்கரியது என்பதில் யாதொரு ஐயமுமில்லை. பகுத்தறிவோடுகூடிய பயிற்சியினாலும், பற்றற்ற தன்மையினாலும் மனதை நெறிப்படுத்த இயலும் என்று பதில் கூறினார்.
அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி: வஸ்யாத்மநாது யததாஸக்யோ வாப்துமயோகத: (ஸ்ரீமத் பகவத்கீதை -6-36)
தியான யோகமானது, நெறிப்படுத்தாத மனதால் அடைதற்கரியது. முறையான முயற்சியாலும் பயிற்சியாலும் மனதை நெறிப்படுத்துபவர்களுக்கு, தியான யோகத்தை அடைவது எளிது என்பது எனது எண்ணம். பகவான் தாம் முன்பு கூறிய கருத்தை மேலும் விளக்கிக் கூறுகிறார். விவேகம் (பகுத்தறிவு), வைராக்யம் (பற்றற்ற தன்மை) ஆகிய இரண்டினாலும் மனதை வசப்படுத்த இயலும் என்று கூறினார் பகவான். பகுத்தறிவு, பற்றற்ற தன்மை ஆகிய இரண்டினால் மட்டுமே அழிகின்ற பொய்யானவற்றிலிருந்து மனதை மீட்டெடுத்து, அழியாத மெய்ப்பொருளின்கண் செலுத்த முடியும். அஸம்யத மனம் என்றால் நெறிப்படுத்தாத மனம் என்று பொருள். தீயவற்றிலிருந்து நல்லதை நோக்கி நெறிப்படுத்தப்பட்ட மனம், பொருளின்ப நாட்டத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை நோக்கி நெறிப்படுத்தப்பட்ட மனம்.
இவ்வாறு மனதை நெறிப்படுத்தவில்லையென்றால், மனம் புறநோக்குடையதாக, நாலாப்பக்கங்களிலும் சிதறி ஓடும். அத்தகைய மனதை உடைய ஒருவனால், தியானத்தில் அமர முடியாது. அப்படியே அவன் தியானத்தில் அமர்ந்தாலும் அவன் மனதில் ஏதோ ஓர் உலகப் பொருளின் மீதே நாட்டம் மிகுந்திருக்கும். பூஜையறையில் அமர்ந்தாலும், மனம் பரம்பொருளை விடுத்து, ஏதோ ஓர் அற்பப்பொருளை எண்ணிக் கொண்டிருக்கும். இவ்வாறு கீழான ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மனதைக் கொண்டு ஒருவர் தியானத்தில் வெற்றி பெற முடியாது என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகிறார் பகவான். ஆனால், நம்முடைய மனதில் விவேக வைராக்ய எண்ணங்கள் அதிகமாகி, பரம்பொருள் நாட்டம் அதிகரித்தால், தியானத்தில் அமராதபோதும், கண்களை மூடாதபோதும், எங்கு சென்றாலும், மனம் பரம்பொருளிலேயே நிலைத்திருக்கும். எச்செயலில் ஈடுபட்டிருந்தாலும், நாம் எதனை ஆழமாக மனதில் நேசிக்கிறோமோ, அதனை நோக்கியே நம்முடைய மனம் சென்று கொண்டிருக்கும்.
எத்தவத்தைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர்மனம் இருக்கும் மோனத்தே
என்பதற்கிணங்க, மனம் எளிதாகப் பரம்பொருளில் ஒடுங்கும். தாய்மை அடைந்திருக்கும் ஒரு பெண், என்ன செயலில் ஈடுபட்டிருந்தாலும், மனம் முழுவதும் தன்னுடைய குழந்தையின் மீதே நிலைத்திருப்பதை உணர்வாள். குழந்தையைப் பற்றி நினைப்பதற்கு அவள் தனியாக தியானத்தில் அமரத் தேவையில்லை. குழந்தையைப் பற்றிய எண்ணத்தை மறந்து, வேறு வேலையில் ஈடுபடத்தான் அவள் மிகுந்த முயற்சி செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில், அவள் குழந்தையை அவ்வளவு நேசிக்கிறாள். வேலைக்குச் செல்லும் தாய் கூட தன்னுடைய குழந்தையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பாள். மனதை நெறிப்படுத்திய யோகியும் பரம்பொருளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார். வாழ்வின் முதற்பொருள் பரம்பொருள்தான். போற்றி என்வாழ்முதல் ஆகிய பொருளே என்று பாடினார் மாணிக்கவாசகர்.
உள்ளத்தில் தெளிந்த பகுத்தறிவும் பற்றற்ற தன்மையும் கூடியவராய், நெறிப்படுத்தப்பட்ட மனதை உடையவர், ஸம்யதாத்மா எனப்படுகிறார். அவருக்கு வாழ்க்கையைப் பற்றிய குறிக்கோள் மிகத் தெளிவாக இருக்கிறது. அத்தகையவர், ஆன்மிக வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்து, அதற்கென்று நேரத்தை ஒதுக்குவார். அத்தகையவருக்கு சாஸ்த்ரங்களின் வாயிலாக, குரு முகமாக, பரம்பொருள் தத்துவத்தை அறிந்து கொள்வதும், தியான யோகத்தில் நிலைத்திருப்பதும் மிக எளிதாக இருக்கிறது.
|
|
|
|