|
ராமரின் நண்பர் பூரி கீர்த்தி, தமது பணியாளர்கள் மூலம் ஒரு கூடை நிறைய திராட்சைக் கனியும் மற்றொரு கூடையில் சண்பகம், மனோரஞ்சிதம், மகிழம்பூ போன்ற மலர்களையும் ராமர் அரண்மனைக்கு அனுப்பியிருந்தார். பூக்களின் மணம் ஜானகியை கவர்ந்திழுக்க, அவற்றை கூடையோடு எடுத்து முகர்ந்து பார்த்தாள். பிறகு, முன்போலவே மூடிவைத்து விட்டு நந்தவனம் சென்று விட்டாள். ராமர் பூக்களை தாயார்கள், சுமந்திரர் வசிஷ்டர் இல்லங்களின் பூஜைக்குப் பகிர்ந்தளித்தார். ஜானகி ஏகாதசி விரதம் இருப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தாள். துவாதசியன்று துளசி பூஜை செய்து பிரதட்சணம் வருகையில் அவளது புடைவைத் தலைப்பு துளசிச் செடியில் சிக்க, அதை மீட்கும் முயற்சியில் ஒரு பச்சை துளசி இலை செடியிலிருந்து விடுபட்டு விழுந்தது. இது எதுவும் அறியாத ஜானகி, அரண்மனைக்குள் செல்ல, நாரதர் வந்திருப்பதைக் கண்டு அவரை துவாதசி பாரணை செய்ய வேண்டினாள்.
தாயே! நீங்கள் பரிமாறாமலிருந்தால் நான் உணவை ஏற்கிறேன் என்றார் நாரதர். சீதையும், ராமரும் திடுக்கிட்டனர். ஸ்வாமி! அத்தனை பெரிய பரவியா நான்? எனக் குழறினாள் ஜனகவல்லி. துவாதசியன்று துளசியைக் கிள்ளுதல் பாபம் அது. விஷ்ணுவின் சிரஸைக் கொய்ததற்குச் சமம். இதை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்றார் திரிலோக சஞ்சாரி. எப்பேர்ப்பட்ட குற்றத்துக்கும் பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கான தோஷ சாந்தியைச் சொல்லி, சீதையை இப்பிழையிலிருந்து மீட்டருள வேண்டும் என வேண்டினார் ராமர். துளசி இலையை என் கண் முன்னால் செடியில் மீண்டும் ஒட்டிக் கொள்ளச் செய்தால், சீதை பரிசுத்தையாவாள் என்றார் முனிவர். சீதை, அவ்வண்ணமே செய்கிறேன் எனக்கூறி, நந்தவனம் சென்று கீழே கிடந்த துளசி தளத்தை எடுத்தாள். இதற்குள் அரண்மனையெங்கும் செய்தி பரவ, ஊர்மிளை முதலான சகோதரியரும், லக்ஷ்மணர் முதலானோரும் நந்தவனம் விரைந்தனர்.
துளசி மாதா! நான் பதிவிரதை என்பது மெய்யானால் நீ செடியோடு இணைய வேண்டும் என்று சற்று முன் உதிர்ந்த இடத்தில் ஒட்டினாள். இலை செடியில் சேராமல் மீண்டும் விழுந்தது. இதைக் கண்டு பயந்த சீதையிடம் நாரதர் மெதுவாக அவள் காதருகில், தேவி! பதிவிரதா சிரோன்மணிகள் தெய்வத்துக்குப் படைக்கும் நைவேத்யங்களையும், மலர்களின் வாசனையையும் நுகரக் கூடாது. இது ராமபிரானின் சோதனை, அதனால்தான் முந்தானை பட்டு துளசி இலை உதிர்ந்தது. உங்கள் மூலம் உலகுக்குப் புரிய வைக்க தாசரதி நடத்திய நாடகம் இது. அர்ச்சனைப் பூக்களை நுகர்ந்ததைத் தவிர, வேறு எந்த பாபத்தையும் நான் செய்ததில்லை என்பது சத்தியமானால் இந்த துளசி தளம் மீண்டும் செடியோடு சேரட்டும் என்று சொல்லுங்கள். கோபத்தில் சபித்து விடாதீர்கள் என்றார்! சீதை அவ்வண்ணமே கூற, துளசி இலை மீண்டும் செடியோடு ஒட்டிக் கொண்டது. ஆகாயத்திலிருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தனர் பின்பு, சீதை பரிமாற, நாரதர் போஜனம் செய்து முடித்தார். |
|
|
|