|
கன்னட தேசத்தில் பசவேசர் என்னும் வீர சைவ மடத்தின் துறவி இருந்தார். தினமும் சிவபூஜை செய்யும் இவர், அடியார்களுக்கு அன்னமிடுவது வழக்கம். சிவனை மட்டும் வழிபடும் வீர சைவர்கள், கழுத்தில் ருத்ராட்சம் போல சிவலிங்கத்தை அணிந்திருப்பர். வசதி படைத்தவர்கள் தங்கம் அல்லது வெள்ளியில் பூண் பிடித்து சிவலிங்கம் அணிவர். மற்றவர்கள் லிங்கத்தை மறைத்து துணி சுற்றியபடி அணிந்திருப்பர். இவர்களை லிங்காயத்து என்றும் சொல்வர். ஒருநாள் மடத்தில் தடபுடலாக அன்னதானம் நடந்தது. பசியுடன் வந்த இரு இளைஞர்கள், விஷயத்தைக் கேள்விப்பட்டு, பசியாற விரும்பினர். கழுத்தில் சிவலிங்கம் இல்லையே என்ன செய்வது?” என்று கேட்டான் ஒருவன். அதற்கு மற்றொருவன்,“இதோ குப்பையில் கிடைக்கும் சொத்தை கத்திரிக்காய் தான் நமக்கு சிவலிங்கம் என்றபடி கீழே கிடந்த கத்திரிக்காய்களைக் கையில் எடுத்தான். இருவரும் ஆளுக்கு ஒன்றாக சிவலிங்கமாக கட்டிக் கொண்டு கந்தை துணியால் மறைத்துக் கொண்டனர். நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு லிங்காயத்துகள் போலவே, “ஹர ஹர சிவ சிவ மகாதேவா” என்று கோஷமிட்டபடி மடத்திற்குள் நுழைந்தனர். பந்தியில் அமர்ந்த இளைஞர்களின் முன் வாழைஇலை போடப்பட்டது.
சோறு, சாம்பார், காய்கறி என அனைத்தும் வரிசையாகப் பரிமாறப்பட்டன. ஆனால், உண்பதற்கு முன்பாக, துறவி பசவேசர் கற்பூர தீபாராதனை காட்டியபடி, அமர்ந்திருக்கும் அடியார்களின் முன் வரத் தொடங்கினார். பந்தியில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக கற்பூரத்தின் முன் கழுத்தில் கிடந்த சிவலிங்கத்தைப் பிரித்துக் காட்டியதோடு, கண்களில் ஒற்றிக் கொண்டனர். இதைக் கண்ட இளைஞர்களுக்கு, தங்களின் குட்டு வெளிப்பட்டு விடுமே என்ற பயம் தொற்றியது. பசவேசர் அவர்களின் அருகில் நெருங்கியதும் அலறியபடி எழுந்தனர். பசவேசருக்கு அவர்களின் நிலை புரிந்தது. அவர்களைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. மனதிற்குள், “என் உயிராக விளங்கும் சிவனே ! பசியின் கொடுமையால் தவறு செய்து விட்டார்கள். இத்தனை காலமும் நான் செய்த பூஜைக்கு பலன் இருக்குமானால் அதனை இவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர்களின் கழுத்தில் கிடக்கும் கத்திரிக்காய் சிவலிங்கங்களாக மாறட்டும்” என்று வேண்டினார். அவருடைய வேண்டுதல் பலித்தது. இளைஞர்களின் கழுத்தில் சிவலிங்கம் காட்சியளித்தது. பசவேசர் தீபாராதனை காட்ட இருவரும் சிவலிங்கத்திற்கு காண்பித்ததோடு கண்களில் ஒற்றிக் கொண்டனர். பசவேரின் திருவடிகளில் விழுந்தபடி, சொத்தை கத்திரிக்காயாக இருந்த எங்களை சொக்கத்தங்கமாக மாற்றிய நீங்களே எங்களின் கண் கண்ட தெய்வம். உங்களுக்கு சேவை செய்வதே எங்களின் கடமை என்று சொல்லி ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.
|
|
|
|