|
பசுவதை கூடத்தில் தன்னை சம்ஹாரம் செய்ய வந்த ஒருவனைப் பார்த்து கோமாதா சிரித்தது. அவன், நான் உன்னை சம்ஹாரம் செய்ய வந்துள்ளேன். அது தெரிந்தும்கூட நீ எதற்காக சிரிக்கின்றாய்? என்று கேட்டான். கோமாதா சொன்னது, நான் ஒருபோதும் மாமிசத்தை உண்டதில்லை. புல்லையும், நீங்கள் போடும் அழுகிய காய்கறி போன்றவற்றையுமே உண்கிறேன். யாருக்கும் எந்தத் தவறும் செய்ததில்லை. என் ரத்தத்தையே பாலாகக் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைகளுக்கும் பால் கொடுத்தேன். பாலிலிருந்து வெண்ணெய் அதிலிருந்து நெய் எல்லாம் உங்களுக்கே உபயோகமாகிறது. என் சாணம் வறட்டியாகி, உங்கள் அடுப்புக்கு எரிபொருளானது அதுவே உங்கள் வயலுக்கும் உரமானது.
எல்லாவகையிலும் உங்களுக்கு உதவியாக இருந்த என்னை அறுத்துக் கொல்ல வந்திருக்கிறாய் இப்போதும் பார், என்னுடைய பாலிலிருந்து கிடைத்த சக்தியால்தான் இந்தக் கொலை ஆயுதத்தை தூக்கும் ஆற்றலே உனக்கு வந்தது. உன்னைப் பெற்ற தாயைவிட மேலாக உனக்கு உதவியாக இருந்தேன். கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிரியமானவள், நான். இப்படி எல்லாம் இருந்தும், என் மரணம் மிகமிகக் கொடுமையாக இருக்கப்போகிறது. அமைதியாகவே வாழ்ந்து, உன் சந்ததிக்கு உதவிகளை மட்டுமே செய்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுக்கும் உன் கதி என்னவாகும்? அதனால்தான் உன் வருங்காலத்தை நினைத்து நான் சிரித்தேன்! பசு சொன்னதைக் கேட்டவன் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனைக் கொல்லும் எண்ணத்தைக் கைவிட்டவன், பாசத்தோடு அதனை அணைத்துக்கொண்டான். இப்போது, கோமாதாவின் கண்களும் குளமானது. |
|
|
|