|
ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி, இல்லாததும் பொல்லாததுமாய் செய்திகளைச் சொல்லும் பழக்கம் உடையவனாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அச்சீடன் குருவிடம் மன்னிப்புக் கோரினாலும், அவன் மற்றவர்க்குச் செய்த தீமையின் தாக்கம் அவன் மனத்தில் ஆழமாய் பதியவில்லை. இதை அறிந்த குரு அச்சீடனிடம், ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து, அதை நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில்நின்று சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்கவிட்டு வரும்படி சொன்னார். அச்சீடனும் அதை வெகு சுலபமாகச் செய்துவிட்டு வந்தான்.
அவனிடம் குரு சொன்னார். சீடனே, மைதானத்தில் நீ பறக்க விட்ட பஞ்சை எல்லாம் மீண்டும் ஒன்று விடாமல் சேகரித்து வா என்றார்! சீடன், இதென்ன ஆகிற காரியமா? என திகைத்தான். குருவே, அந்தப் பஞ்சுக் காற்றில் இந்நேரம் எங்கெங்கோ பறந்து போய் இருக்குமே? அதை எப்படி மறுபடியும் சேகரித்து வர முடியும்? என்றான். ஒரு மணி நேரத்துக்கு முன்பு பறக்க விட்ட பஞ்சை உன்னால் சேகரித்துக் கொண்டு வரமுடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி, வதந்திகளைப் பறக்கவிட்டு வந்திருக்காய். இப்போது அசைவ யார் யார் வாயில் எப்படியெல்லாம் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என்று நினைத்தாயா? மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நீ நினைக்கிறாயா? என்றார் குரு. அப்போதுதான் அந்தச் சீடனுக்குத் தன் செயலின் தன்மை முழுவதுமாகப் புரிந்து. அன்றிலிருந்து அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான் அவன். |
|
|
|