|
ஒரு கோயிலில் ஸ்ரீமத் ராமாயணம் பிரவசனம் தினமும் மாலை நடந்து கொண்டு இருந்தது. உபன்யாசகரின் அருகில் மணை போடப்பட்டு, அதன் மேல் பட்டு வஸ்திரமும், அருகே ஒரு வெள்ளித்தட்டில் இரண்டு கொய்யாப் பழங்களும் வைக்கப்பட்டிருந்தது. நான்கு நாட்கள் தொடர்ந்து உபன்யாசத்தைக் கேட்டு ரசித்த அவரின் மாணவர் ஒருவர், மறுநாள் உபன்யாசம் முடிந்த பின் பவ்யமாக மணைப்பலகையையும், கொய்யாபழத் தட்டையும் சுட்டிக்காட்டி, அதன் தாத்பர்யத்தை விளக்குமாறு குருவை வேண்டினான். அதைக் கேட்டு நகைத்த உபன்யாசகர், யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்! எனும் ஸ்லோகத்தைக் கூறி, எங்கெல்லாம் ராமரின் பெருமை பேசப்படுகிறதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேய ஸ்வாமி வந்துடுவார். நம் வீட்டுக்கு ஒரு விருந்தினர் வந்தால் பழம், காபி தந்து உபசரிபப்து போல, ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்த கொய்யாப்பழங்களை அவருக்கு இங்கு நிவேதனமாய் வைக்கப்பட்டுள்ளது என விளக்கம் தந்து, ஆஞ்சநேயர் சாப்பிட்ட பிரசாதமான பழங்களை அவனுக்கே அளித்தார்.
ஆயினும் தன் சந்தேகம் தீராத அச்சீடன், பழங்கள் சிறிதும் குன்றாமல் அப்படியே இருக்கிறதே, ஆண்டவனாயினும் சாப்பிட்டிருந்தால் சிறிதாவது குறைந்திருக்குமே! எனக்கேட்டான். புன்னகைத்த குரு, தன்னிடமிருந்த ஒரு புத்தகத்தை திறந்து குறிப்பிட்ட ஸ்லோகத்தை ஐந்து நிமிடங்களில் மனப்பாடம் செய்து வருமாறு பணித்தார். சீடனும் குறிப்பிட்ட காலத்திற்குள் ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து ஒப்பித்தான். குரு மகிழ்ந்து, அம்மாணவனை நோக்கி, நான் கூறியபடி அட்சர சுத்தமாய் அந்த ஸ்லோகத்தை உருப்போட்டு விட்டாய். அந்த அட்சரங்களை நீ கிரகித்து விட்டதால், அந்தப் புத்தகத்திலிருந்து எழுத்துகள் எல்லாம் மறைந்து போய்விடவில்லை. அது மாதிரிதான் இதுவும்! தெய்வத்துக்கு நாம் எதை அர்ப்பணித்தாலும் அதில் இருக்கும் பக்தி சிரத்தையுடன் கூடிய ருசியை மட்டும் எடுத்துக் கொண்டு பதார்த்தங்களை பரம கருணையோடு நமக்கே விட்டுவிடுகிறார். வைத்த கொய்யா இரண்டும் வாடாமல், வதங்காமல் புதிதுபோல் இருக்கும் ரகசியம் இதுதான். ஆத்மார்த்தமான பக்தியையும், சிரத்தையயும் ஆண்டவன் ஒருபோதும் விலக்கமாட்டார் எனக் கூறினார். தன் மனதை வாட்டிய சந்தேகத்திற்கு தக்க விளக்கம் கிடைக்க சீடன் தெளிவு பெற்றான். |
|
|
|