|
குரு நாதரும், சீடர்களும் யாத்திரை சென்று கொண்டு இருந்தனர். வானில் சூரியன் சுட்டெரித்தது.அதில் ஒரு சீடர், “குருவே... கோவில் வழிபாடு செய்யாதவருக்கு இறைவனின் அருள் கிடைக்குமா?அல்லது அன்றாடம் அவரை வழிபடுபவருக்கு மட்டும் தானா? எனக் கேட்டார். வெயிலின் கடுமை அதிகம் என்பதால் அருகில் தென்பட்ட மரநிழலில் குரு ஒதுங்கினார். அவரை சீடர்களும் பின் தொடர்ந்தனர். குரு சந்தேகம் எழுப்பிய சீடரிடம், “நீ எப்போதாவது இந்த மரத்துக்கு தண்ணீர் ஊற்றியதுண்டா?”என்றார். “இல்லை குருவே!” “ஆனால், இப்போது வெயிலுக்கு ஒதுங்கினாயே எப்படி? “குருவே... எனக்கு நிழல் தர மரம் என்ன மறுக்கவா போகிறது? “இந்த மரத்தைப் படைத்ததே அந்த இறைவன் தான். இந்த ஓரறிவு உயிரே கைமாறு கருதாமல் அனைவருக்கும் நிழலும், கனியும், குளிர்ந்த காற்றும் வழங்கும் போது இறைவனின் பெருங்கருணைக்கு அளவேது?வழிபட்டாலும், வழிபடாவிட்டாலும் அவருக்கு ஒன்று தான். உயிர்கள் அனைத்தும் அவரின் பிள்ளைகளே. தன்னை வழிபடாதவர்களுக்கும் எல்லா நன்மையும் அளிக்கவே செய்கிறார். அதற்கு சாட்சியாகஇந்த மரம் இருக்கிறது. தன்னை வெட்ட வருபவனுக்கும் நிழலும், கனியும் கொடுத்து உதவத் தானே செய்கிறது சம்மதிப்பது போல மரமும் காற்றில் தலையசைத்தது. சீடனின் கண்ணுக்கு மரம், கடவுளாக தெரிந்தது. |
|
|
|