|
குருகுலத்தில் படிக்கும் சீடன் ஒருவனுக்கு சந்தேகம்; ஆனால் குருவிடம் கேட்க பயம். இதை அறிந்த குரு அந்த சீடனிடம், நீ ஏதோ என்னிடம் கேட்க நினைக்கிறாய். தயங்காமல் கேள்? என்றார். சுவாமி! இறைவனுக்கு தூக்கம் வருமா? அவர் நம்மை போல தூங்குவதுண்டா? என்று கேட்டான். குருவிற்கு அவன் கேள்வி சிரிப்பை தந்தது. அறையின் மூலையில் இருந்த கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார். இந்தக் கண்ணாடியை கையில் பிடித்தபடி நின்று கொண்டிரு. கண்ணாடிக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்று சொல்லிவிட்டுப் போனார் குரு. சீடன் அப்படியே நின்றான். சற்று நேரத்தில் அவனுக்கு தூக்கம் வந்தது. தூக்கத்தை விரட்ட விறைப்பாக நின்று தலையை சிலுப்பி தூக்கத்தை தவிர்த்தான். சிறிது நேரத்தில் மீண்டும் உறக்கம் வந்தது. தன்னை மறந்து ஒரு வினாடி கண்ணயர்ந்தான். கண்ணாடி கீழே விழுந்து துண்டுகளாக சிதறியது. பதறிப்போன சீடன் திக்கித்து நின்றான். பயப்படாதே சீடா! நீ ஒரு வினாடி கண் அயர்ந்தாய். உன் பொறுப்பில் விட்ட கண்ணாடி துண்டுகளாகிவிட்டது. ஆனால் இந்த பிரபஞ்சம் முழுவதையும் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் இறைவன் கண்ணயர்ந்தால் இந்த உலகம் என்னவாகும்? இறைவன் தூங்கிறானா என்ற சந்தேகம் தீர்ந்ததா? என்று அன்புடன் விளக்கினார் குரு. |
|
|
|