|
கஞ்சன் ஒருவனின் காலம் முடியவே மேலுலகம் சென்றான். அவனை நரகத்தில் தள்ள உத்தரவிட்டார் எமதர்மர். நரகத்தில் தள்ளப்பட்ட அவன், கொடுமை தாளாமல் யாராவது என்னை தூக்கி விடுங்கள் எனக் கதறினான். நரகத்தின் மேலிருந்த பாலத்தின் வழியாகச் சென்ற முனிவர் ஒருவர், அவனை தூக்கிவிட உத்தேசித்து, அவன் தான தர்மம் ஏதேனும் செய்திருக்கிறானா? என்று கேட்டார். வெகு நேரம் யோசித்தவன், ஒரு நாள் ரொம்ப பசியெடுக்கவே மிகக் குறைந்த விலைக்குக் கேட்டு வாழைப்பழம் ஒன்று வாங்கினேன். அந்தப் பழம் பாதிக்குமேல் அழுகலாக இருந்ததால், அதைத் தின்னத் தயங்கி ஒரு பிச்சைக்காரனுக்குப் போட்டுவிட்டேன். அதுதான் நான் செய்த ஒரே தர்மம்! என்றான். அதைக் கேட்ட முனிவர் இரக்கப்பட்டு ஒரு மந்திரத்தைச் சொன்னார். உடனே கஞ்சன் கையில் எங்கிருந்தோ ஒரு அழுகல் வாழைப்பழம் வந்து விழுந்தது. நீளமாக வளரத் தொடங்கிய அதைப் பிடித்துக் கொண்டு நரகத்தில் இருந்து மேலேறி வா என்று சொன்னார் முனிவர்.
ஏற ஏற பழம் வழுக்கினாலும் மிகவும் சிரமப்பட்டு ஏறினான் கஞ்சன் திடீரென்று தன் எடை அதிகரிப்பதாக உணர்ந்தான். குறிப்பாக கால்களில்தான் அந்த பாரம் என்று உணர்ந்த அவன், என்னவென்று பார்க்க, அவனது ஒவ்வொரு காலையும் இருவர் என நான்கு பேர் பிடித்துக்கொண்டு அவன் உதவியால் மேலே வந்து கொண்டிருந்தனர். கஞ்சனுக்கு கடும் கோபம் வந்தது நான் எத்தனை கஷ்டப்பட்டு வாழைப்பழம் தருமம் செய்தேன். அதன் பலனிலா பங்கு கேட்கிறீர்கள். மரியாதையாக காலைவிடுங்... வார்த்தையை முடிப்பதற்குள் சர்ரென வழுக்கி நரகத்தின் உள்ளேயே விழுந்தான் கஞ்சன். அழுகல் வாழைப்பழம் உடனே மறைந்து போயிற்று. அழுகல் பழத்துக்கே என் தருமம். நான் கஷ்டப்பட்டேன் என்று அகங்காரமாகப் பேசுகிறாயே... ஐயோ பாவம்! நரகத்தில் இருந்து நாலு பேராவது நம்மோடு சேர்ந்து மேலே வரட்டும் என்கிற இரக்கமும் உன்னிடம் இல்லையே! உன் மனதில் அங்காரம் இல்லாமல், அந்தக் கருணையை நினைத்திருந்தால் பிடிமானம் கெட்டிப்பட்டிருக்கும். நீயும் மேலே வந்திருப்பாய். உன் காலைப் பிடித்தவர்கள் நல்லவனை அடையாளம் கண்டு அவனது காலைப் பிடிக்காமல், கஞ்சனான உன்னைப் பிடித்ததால் அவர்களும் கீழே விழ வேண்டியதாகி விட்டது இனி நீ மேலே வருவது இயலாத விஷயம் சொல்லிவிட்டு மறைந்தார், முனிவர்.
|
|
|
|