|
யதார்த்தத்தை உணராதவன் தெய்வத்தை உணர வழியில்லை என்றார் நண்பர் ஒருவர். ஏன் அப்படி? என்று கேட்டபோது, புத்தகத்தில் படித்ததாகக் கதையொன்று சொன்னார். கடும் குளிர்காலத்து இரவு, புத்த விகாரை ஒன்றில் தங்கியிருந்த முதியவர் ஒருவர், குளிர்காய்வதற்காக தீ முட்ட நினைத்தார். வெளியே விறகு சேகரிக்கச் செல்ல அவரால் இயலவில்லை. பார்த்தார்.... விகாரையில் ஆங்காங்கே இருந்த மரத்தாலான புத்தர் பிரதிமைகளை எடுத்துவந்து, ஓரிடத்தில் குவித்து, தீ முட்டி, குளிர் காய்ந்தார். இந்நிலையில், எதன்பொருட்டோ விழித்துக்கொண்ட விகாரையின் குரு, தாழ்வாரத்தில் நெருப்பு எரிவதைக் கண்டு அருகில் வந்தார். முதியவரின் செயலைக்கண்டு கொதித்துப்போனார். அக்கணமே அவரை விகாரையில் இருந்து வெளியேற்றினார்.
விடிந்தது, முதியவர் ஒருவேளை குளிர் தாங்காமல் இறந்திருப்பாரோ என்ற எண்ணம் எழவே, வெளியில் வந்து பார்த்தார் குரு. அங்கே ஒரு கல்லுக்குப் பூச்சூடி வழிபட்டுக் கொண்டிருந்தார் முதியவர். குருவின் கோபம் அதிகரித்தது. அருகில் சென்று கத்தினார், இந்தக் கல் உமக்குப் புத்தராகிவிட்டதோ என்று. பதிலுக்கு, உங்களுக்கு மரப்பிரதிமை புத்தராகும்போது, எனக்கு இந்தக் கல் புத்தராகாதா? என்று கேட்ட முதியவர் தொடர்ந்து, மரப் புத்தரை நெருப்பில் போட்டதற்கு நீங்கள் கோபித்துக் கொண்டீர்கள். ஆனால், எனக்குள் இருக்கும் புத்தரின் குளிரைப் போக்க எனக்கு வேறு வழி தெரியவில்லையே! என்றார். குருநாதருக்கு உண்மை புலப்பட்டது நமக்கும்தான்!
|
|
|
|