|
துளசிதாசர், தமது ஹனுமன் சாலீஸாவில், ப்ரபு முத்ரிகா மேலி முக் மாஹி, ஜலதி லாங்கி கயே அச்ரஜ் நாஹீ
என்கிறார்! ராமனுடைய முத்திரையை (மோதிரத்தை) வாயில் வைத்துக் கொண்டு சமுத்திரத்தைத் தாண்டினான் ஹனுமன் என்பது இதன் பொருள். பவன புத்ர ஹனுமன் கடலைத் தாண்டுவதற்குத் தயாராகக் கரையில் நின்று கொண்டிருக்கிறார். கையில் ராமர் பெயர் பொறித்த மோதிரம். ராமர் சீதா தேவியிடம் அடையாளமாகக் காண்பிக்கக் கொடுத்தது. கடலைத் தாண்டும்போது மோதிரத்தை எப்படிப் பத்திரமாகப் பாதுகாப்பது என்று ஆஞ்சநேயர் யோசிக்கிறார். அவர் உடையிலோ அதைப் பாதுகாப்பாக வைக்க இயலாது! தம் கையில் அணியலாம் என்றாலோ, திருமணத்தின் போது ராமனுக்கு சீதாதேவியால் கொடுக்கப்பட்ட மோதிரம் அது. ராமபிரானைத் தவிர மற்றவர்கள் அணிவது அபசாரம். உள்ளங்கை முஷ்டியில் வைத்துக் கொண்டால் கடலைத் தாண்டும்போது நழுவி விழுந்து விடக் கூடும். என்ன செய்யலாம்? வெகுளியான ஹனுமன் மோதிரத்தை தமது வாயில் போட்டுக்கொண்டு அனாயாசமாகக் கடலைத் தாண்டி விட்டார்! இதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாமல்லவா? இறைவன் பெயரை வாயில் வைத்துக் கொண்டால் (அதாவது, கடவுளின் நாமத்தை இடைவிடாது ஜபித்தால்) கடலைத் தாண்டுவது போன்ற அசாத்தியமான காரியமும்கூட, குழந்தையின் விளையாட்டுப்போல எளிதாகும் என்றும் கொள்ளலாம். |
|
|
|