|
கங்கைக்கரையில் யாக்ஞவல்கிய முனிவரின் ஆஸ்ரமம் இருந்தது. ஒருநாள் ஆற்றில் நீராடி விட்டு திரும்பிய முனிவரின் பாதத்தில் எலி ஒன்று விழுந்தது. நிமிர்ந்த பார்த்த முனிவருக்கு, வானத்தில் பறந்த கழுகு தன் வாயில், கவ்வியிருந்த எலியை கீழே விட்டு விட்டதை உணர்ந்தார். அதன் மீது இரக்கம் கொண்ட முனிவர், தன் தவசக்தியால் அதற்கு உயிர் கொடுத்ததுடன், ஒரு பெண் குழந்தையாக்கி, மனைவி மைத்ரேயிடம் ஒப்படைத்தார். குழந்தை குமரியானாள். மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பித்தது.சூரியதேவனை வரவழைத்த முனிவர், மகளிடம்,இவனை மணக்க சம்மதம் தானே? எனக் கேட்டார். எனக்கு இவரையும் விட பெரிய இடம் பாருங்கள் அப்பா... என்றாள் மகள். என்னிலும் பெரியவர் யார் என்றால் மேகம் தான். கரிய மேகம் மறைக்கும் போது என்னால் பிரகாசிக்க முடிவதில்லை என்று சொன்ன சூரியன் அங்கிருந்து மறைந்தார். உடனே மேகதேவனுக்கு ஆள் அனுப்பினார் முனிவர்.
கன்னங் கரேல் என இருக்கும் இவரை மணக்க எனக்கு விருப்பமில்லை. இவரை விட உயர்ந்தவரைப் பாருங்கள் என்றாள் மகள். மேகதேவன் அவர்களிடம், என்னை விட பெரியவர் வாயு தேவன் தான். அவரது வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை, என்று சொல்ல, வாயுதேவனை வரவழைத்தார் முனிவர். மகளிடம், இவரை மணம் செய்ய சம்மதமா? என்று கேட்டார். ஓரிடத்தில் நில்லாமல், சஞ்சல புத்தியுடன் ஓடும் இவரை எப்படியப்பா மணப்பது? என்று மறுத்தாள். வாயுதேவா! உன்னை விட பெரியவர் யார் இருக்கிறார்? என்றார் யாக்ஞவல்கியர். என்னிலும் பெரியவர் கிரிதேவர் தான். நான் எப்படி பலமாக வீசினாலும் கிரி (மலை) சிறிதும் அசைவதில்லை. அவரிடம் பேசிப் பாருங்கள் என்று சொல்லி வாயுதேவன் விடை பெற்றார். கிரிதேவர் முனிவரின் முன் நின்றார்.
அசையாது ஒரே இடத்தில் ஜடம் போல நிற்கும் இவரை மணந்தால் என் வாழ்க்கை என்னாவது? என்று மகள் சலித்துக் கொண்டாள். யாக்ஞவல்கியர் கிரிதேவரிடம், மலையே! உன்னை விட பெரியவர் யாரும் இருக்கிறார்களா... என்ன? என்று கேட்டார். பெண்ணின் மனதைப் புரிந்து கொண்ட கிரிதேவர் சிரித்தபடி, எலியார் தான் இவளுக்கு ஏற்றவர். கூரிய பற்களால் அவர், என்னைக் குடைவது தாங்கள் அறியாததா? பெரியவரான அவரே இவளுக்குப் பொருத்தமானவர் என்று சொல்லி புறப்பட்டார். கிரிதேவர் சென்றதும், எலியாரை வரவழைத்தார் முனிவர். அவரைக் கண்டதும் மகள் நாணத்தால் தலை குனிந்தாள். மாறாதைய்யா மாறாது. மனமும், குணமும் மாறாது என்ற உண்மையை உணர்ந்த முனிவர், மகளை மீண்டும் அழகிய எலியாக மாற்றினார். மாப்பிள்ளை எலியின் கையில் அவளை ஒப்படைத்தார்.
|
|
|
|