|
ஒரு துறவியிடம் அரசன், “நான் மக்களுக்கு இலவச விடுதிகள் கட்டியுள்ளேன். கோவில்களில் திருப்பணி செய்துள்ளேன். தினமும் அன்னதானம் செய்கிறேன்,” என்று நீட்டிக் கொண்டே போனான். துறவி “அப்படியா!” என்று தலையாட்டி விட்டு அமைதி காத்தார். அரசனுக்கு என்னவோ போலாகி விட்டது. அவர் தன்னை பாராட்டுவார் என்றிருந்த அரசனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இருந்தாலும் விடாமல், துறவியே! இவ்வளவு சேவை செய்த எனக்கு சொர்க்கம் நிச்சயம் தானே!” என்றான்.“ இல்லை” என்றார் துறவி. அதிர்ச்சியுடன் ஏன்? என்றான் அரசன். “எதைச் செய்தாலும் நான் தான் செய்தேன் என்ற ஆணவம் கூடாது. அது புண்ணியத்தை தடுத்து பாவச் சேற்றில் ஒருவனைத் தள்ளி விடும். எனவே சொர்க்கம் கிடைக்க வாய்ப்பில்லை,” என்றார். இதைத்தான், வலது கை கொடுப்பது இடதுகைக்கு தெரியக்கூடாது என சொல்கிறார்கள். |
|
|
|