|
அகத்தில், இறைவனை குடியேற்றி விட்டால், புறத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை; அவற்றை, இறைவனே பார்த்துக் கொள்வார் என்பதற்கு இணங்க, இறை சிந்தனை கொண்ட பெண்மணிக்கு, கடவுள் காட்சியளித்து, ஆட்கொண்ட வரலாறு இது: மங்களவேடு எனும் கிராமத்தில், கானோபாத்ரை என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். காண்போரை சுண்டி இழுக்கும் அழகு படைத்த அவள், நல்ல குணவதியாகவும் இருந்தாள். பெருமாள் மீது ஆழ்ந்த பக்தியுடைய அவள், உலக இன்பங்களை வெறுத்து, பண்டரிபுரம் சென்று, ஆலயத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தாள். என்ன தான், அவள் துறவற வாழ்வு வாழ்ந்தாலும், பார்ப்பவர் மனம் சும்மாயிருக்குமா... அவளை, சன்னிதியில் பார்த்த ஒருவன், நேரே மன்னரிடம் சென்று, மன்னா... பண்டரிபுரப் பெருமாள் சன்னிதியில், கானோபாத்ரை எனும் பெண்ணை பார்த்தேன். அவளைப் போன்ற பேரழகியை வேறு எங்கும் கண்டதில்லை... என்று சொன்னான்.
அவ்வளவு தான், சூர்ப்பனகை, சீதையை பற்றி வர்ணித்ததை கேட்ட ராவணன் மனது, எவ்வாறு நெறி பிறழத் துவங்கியதோ, அது போல, கானோபாத்ரையை பற்றி கேட்ட மன்னரின் மனமும், சீரழியத் துவங்கியது. உடனே, வீரர்களை ஏவி, கானோபாத்ரையை அழைத்து வாருங்கள்... என்றார். வீரர்கள் சென்று, கானோபாத்ரையிடம் தகவல் சொல்லி அழைத்தனர்; அவள் நடுங்கி, சுவாமி சன்னிதியை அடைந்து, பெருமாளே... உன்னையே நினைத்திருக்கும் என்னை, அரசன் அடைய நினைக்கலாமா... என, முறையிட்டாள். இறைவனும் அவள் பக்திக்கு இரங்கி, நேரில் காட்சியளித்து, அனைவரும் வியந்து பார்த்திருக்க, கானோபாத்ரையின் உயிரை, தன்னுள் சேர்த்துக் கொண்டார். அவள் உடலை கோபுர வாயிலின் வெளிப்புரத்தில் அடக்கம் செய்தார், அர்ச்சகர். கானோபாத்ரையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில், ஒரு மரம் முளைத்தது. நடந்ததை அறிந்த வீரர்கள் ஓடிச் சென்று, அரசரிடம் விபரம் கூறினர். திடுக்கிட்ட அரசர், அர்ச்சகரை அழைத்து விபரம் கேட்க, அவரும் நடந்ததை விவரித்தார். உடனே, ஆலயத்திற்கு விரைந்த அரசர், இறைவனை தரிசித்து, உண்மையை உணர்ந்து, நல்லறிவு பெற்றார்.
பேருந்தில் பயணம் செய்யும் பலரும், பல விதமான செயல்களில் ஈடுபட்டிருக்க, ஓட்டுனரோ, அது எதிலும் மனதை செலுத்தாமல், பத்திரமாக அனைவரையும் கொண்டு சேர்ப்பதை போல, நாமெல்லாம் பக்தியெனும் பேருந்தில் பயணம் செய்தாலும், நம் விருப்பப்படி இயங்கிக் கொண்டிருக்கிறோம்.ஆனால், இறைவனை தவிர வேறு எதிலும் சிந்தனையை செலுத்தாத கானோபாத்ரை போன்ற தூய்மையான பக்தர்களோ, இறைவனின் திருவடியை அடைந்து, நமக்கும் வழிகாட்டுகின்றனர். அவர்களை பின்பற்றி, நாமும் இறை சிந்தனையில் மனதை செலுத்தி, நல்வழியில் செயல்படுவோம்! |
|
|
|