|
புத்திசாலி மாணவரான சைதன்யரை, குருநாதர் நாமதேவருக்கு மிகவும் பிடிக்கும். படிப்பு முடிந்ததும் நாமதேவர் அவரிடம், நீ புறப்படலாம். உன் பெற்றோருக்கு தொண்டு செய். கடவுள் துணை இருப்பார், என்று வாழ்த்தினார். சைதன்யர் அவரிடம், கடவுள் துயிருப்பார் என்கிறீர்களே... அது எப்படி சாத்தியம்? எனக் கேட்டார். சைதன்யா... உன்னுடைய சந்தேகத்திற்கு இன்னொரு நாள் விடை அளிக்கிறேன். இந்த பொருளை பவானிபுரத்தில் உள்ள என் சகோதரனிடம் ஒப்படைத்து வா, என்றார். சைதன்யரும் புறப்படார். வழியில் தாகம் ஏற்பட தண்ணீர் தேடி அலைந்தார். வழியில் பார்வையற்ற ஒருவர். செடியிலுள்ள இலைகளை முகர்ந்து பறிப்பதைக் கண்டார். நான் மூலிகை சேகரிப்பவன். பார்வை இல்லாததால் பாம்புக்கடிக்குரிய மூலிகையை முகர்ந்து கண்டுபிடிக்கிறேன், என்ற பெரியவர், அவரிடம் சில இலைகளைக் கொடுத்தார்.
அதை பெற்ற சைதன்யர், ஐயா... குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்றார். அங்கே கிணறு உள்ளது என்றதும், அங்கு சென்று தண்ணீர் குடித்தார். உணவைச் சாப்பிட்டு உறங்கினார். சற்று நேரத்தில் ஏதோ ஒன்று அவரை இடித்து விட்டு ஓடியது, கண் விழித்த போது ஒரு முயல் ஓடுவதைக் கண்டார். அப்போது மரத்தில் சத்தத்துடன் கிளை முறிந்து விழ, எழுந்து ஓடி தப்பித்தார். ஒரு சத்திரத்தில் தங்கினார். திடீரென யாரோ அலறும் சத்தம் கேட்டு எழுந்தார். அங்கிருந்த ஒருவரை ஒரு பாம்பு தீண்டி விட்டு ஓடியதைப் பார்த்தார். தன்னிடமிருந்த மூலிகையைப் பிழிந்து, சாற்றை கடிபட்டவரின் வாயில் விட, அவர் கண் விழித்தார். அவர் அந்நாட்டு மந்திரி. தன் உயிரைக் காப்பாற்றிய சைதன்யருக்கு நன்றி தெரிவித்த அவர், என்னிடம் தேவையான உதவி கேளுங்கள் என்றார்.
நன்றி ஐயா... விரைவில் சந்திக்கிறேன், என்று விடைபெற்றார். குருநாதரின் சகோதரரிடம் பொருளை ஒப்படைத்து விட்டுத் திரும்பி, குருநாதரிடம் நடந்ததை விளக்கினார். கண்ணுக்குத் தெரியாத கடவுள் எப்படி துணையிருப்பார் எனக் கேட்டாயே. இப்போது நேரிலேயே பார்த்து விட்டாயே என்றார் குருநாதர். புரியாமல் விழித்த சைதன்யரிடம், கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். ஆனால், ஒரே உருவத்தில் வருவதில்லை. விஷக்கடிக்கு மூலிகை தந்த முதியவர், தாகம் தணிக்ககாட்டில் கிணறு தோண்டியவர், மரக்கிளை ஒடிந்த போது உன்னைக் காத்த முயல், பாம்புக் கடிக்கு மருந்திட்ட நீ என எல்லோரும் கடவுளின் வடிவங்கள் தான். என்றார். சைதன்யர் மனதிற்குள், கடவுளைக் கண்டேன்! கடவுளைக் கண்டேன் என்று சொல்லி மகிழ்ந்தார். பிறகு அரசுப்பதவியில் அமர்ந்தார். |
|
|
|