|
’அற்பர்களின் தூற்றுதலுக்கு அரை
நாழிகை உயிர்’ என்பர், ஆன்றோர். மாசில்லா உள்ளம் படைத்த உத்தமர்களின் மீது
அவதூறு பரப்பினால், அந்த அநீதியை, கடவுளே பொறுக்க மாட்டார் என்பதை
மெய்ப்பிக்கும் வரலாறு இது: மதுரையில், பாண்டியன் நெடுஞ்செழியன் ஆட்சி
செய்த காலம் அது! சோழநாட்டை சேர்ந்த பராசரன் எனும் வேதியர், சேர நாட்டிற்கு
சென்றிருந்தார். அவருடைய நற்பண்புகள், பிரதிபலன் எதிர்பாராத தூய்மையான
அன்பு மற்றும் தெய்வ பக்தி போன்றவற்றால் கவரப்பட்ட சேர மன்னர், ஏராளமாக
பொன்னும், பொருளும் தந்து, வழியனுப்பி வைத்தார். மன்னர் தந்த
வெகுமதிகளுடன், தன் நாட்டிற்கு திரும்பினார், பராசரன். வழியில், பாண்டிய
மன்னின் ஆட்சிக்குட்பட்ட திருத்தண்கால் எனும் ஊரை அடைந்த போது, அங்கே,
வேதிய சிறுவன் ஒருவன், விவேகத்தோடு, வேதம் ஓதுவதைக் கண்டார். சிறுவனுடைய
தோற்றம், முறை தவறாமல், ஸ்வர சுத்தமாக, வேதத்தை உச்சரித்த பாங்கு போன்ற
வற்றில் மகிழ்ந்த பராசரன், சேர மன்னர், தனக்கு கொடுத்த வெகுமதிகளில்
சிலவற்றை, அச்சிறுவனுக்கு தந்து, ஆசி கூறி, தன் பயணத்தை தொடர்ந்தார்.
தினமும்
அம்பிகையை வழிபட்டு, அவள் அருளை வேண்டி வந்த அச்சிறுவன், எதிர்பாராமல்
கிடைத்த செல்வங்களை எடுத்துச் சென்று, தன் தந்தை வார்த்திகனிடம் தந்து,
நடந்ததை கூற, அவரும் மகிழ்ந்தார். இதையறியாத ஊர்மக்கள், ’வார்த்திகன்
வீட்டில் நிறைய பொன்னும், மணியும் இருக்கு; எங்கோ, திருடி வந்திருக்கான்;
விசாரியுங்கள்...’ என்று புகார் செய்ய, வார்த்திகன் கூறிய உண்மையை நம்ப
மறுத்து, அவரை சிறையில் அடைத்தனர், காவலர்கள். அவர் மனைவியோ, காளி
கோவிலுக்கு சென்று, வாயிலில் நின்று, ’தெய்வமே... எந்த குற்றமும் செய்யாத
என் கணவரை சிறையில் அடைத்து விட்டனர்; காப்பாற்று தாயே...’ என, கண்ணீர்
விட்டு, கதறி அழுதாள். அச்சமயம், வழிபாட்டிற்காக, கோவில் வாயிற் கதவை
திறக்க முயற்சி செய்த ஆலய நிர்வாகிகள், கதவுகளை திறக்க முடியாமல்
அதிர்ந்தனர். தகவல் அறிந்து, விரைந்து வந்த மன்னர், பாண்டியன்
நெடுஞ்செழியன், கோவிலில், அழுது புலம்பி, முறையிட்டபடி இருந்த
வார்த்திகனின் மனைவியை கண்டார். அவளிடமிருந்து விவரமறிந்தவர், ’தாயே...
வார்த்திகன் வாய்மையாளன் என்றால், கோவில் வாயிற் கதவுகளை திறந்து, என்
செங்கோலை, சீர் பெற செய்...’ என, வேண்ட, உடனே, கோவில் கதவுகள் திறந்தன.
உள்ளம் நெகிழ்ந்த, மன்னர், வார்த்திகனை சிறையிலிருந்து விடுவிக்க
உத்தரவிட்டார். பின், வார்த்திகனை வணங்கி, ’ஐயா... என் பணியாளர்கள் செய்த
குற்றத்தை பொறுத்துக் கொள்ளுங்கள்...’ என வேண்டி, இரண்டு ஊர்களை, அவனுக்கு
தானமாக வழங்கினார். திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பதை விளக்கும் கதை
இது! |
|
|
|